பாஜக நினைப்பது நடக்காது – தம்பிதுரை கருத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிந்தகம்பள்ளி கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை, தம்பிதுரை நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது….

தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பது இயல்பு தான்.கடந்தகால தேர்தல்களில் ராஜாஜி,கருணாநிதி,எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தனித்தனியாக கூட்டணி அமைத்துதான் ஆட்சிக்கு வந்தனர்.

ஆனால், கூட்டணி ஆட்சி நடக்கவில்லை. கூட்டு அமைச்சரவையை அமைக்கவில்லை. கூட்டணி என்பது வேறு, ஆட்சியை யார் நடத்துவது என்பது வேறு. 2026 இல் ஆட்சியை அதிமுகதான் நடத்தும். அதில் மற்ற கட்சிகள் பங்கு பெறுவதற்கு இடமே கிடையாது.

“மெகா கூட்டணி அமைப்பேன், திமுகவை வீட்டுக்கு அனுப்புவேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாகக் கூறியுள்ளார். நிறையக் கட்சிகள் நாங்கள் கூட்டு அமைச்சரவையில் பங்கேற்போம் என்று கூறுகின்றனர்.அது அவர்களது ஆசையாக இருக்கலாம். அதிமுக தொண்டர்களும் சரி, மக்களும் சரி கூட்டு அமைச்சரவையை ஏற்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

எடப்பாடி அணியுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவினர் மேடைக்கு மேடை,தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.அவற்றை முற்றாக நிராகரித்து பாஜக நினைப்பது நடக்காது என்பதுபோல் தம்பிதுரை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response