
தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
பீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்குக் காரணம் எஸ்ஐஆர் தான். தமிழ்நாட்டில் 220 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி, பீகாரில் நிதிஷ்குமார் முதல்வரானது போல் முதல்வராவார்.
எஸ்ஐஆரை எதிர்க்க ஒன்றும் இல்லை. காங்கிரசு ஆட்சியிலும் நடைபெற்றுள்ளது. எதற்காக இதை எதிர்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. எஸ்ஐஆர் படிவம் நிரப்பும் இடத்தில் திமுகவினர் தான் இருக்கிறார்கள். எஸ்ஐஆரை வீடு வீடாகக் கொண்டு சேர்க்கவேண்டும்.
எஸ்ஐஆர் பணியை அரசு ஊழியர்கள் புறக்கணித்துள்ளனர். 234 தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் உள்ளன. அதற்கான ஆட்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்தால் தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் என்ன செய்வார்கள். அரசு ஊழியர்கள் செய்வது சரியானதே.
தமிழகத்தில் எஸ்ஐஆர் ஆல் ஒரு கோடி வாக்குகள் குறையும் என சீமான் சொல்வதை விட அதிகமான வாக்குகள் குறையும். திண்டுக்கல் தொகுதியில் மட்டும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வரை குறைய வாய்ப்புள்ளது. தவெக எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து விஜய்யிடம் தான் கேட்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


