
மதுரை ஒத்தக்கடையில் கடந்த 8 ஆம் தேதி நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ‘தமிழ்நாட்டில் 2026 இல் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும்’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் வலியுறுத்திக் கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சு அதிமுகவினரை கடும் அதிர்ச்சியடையச் செய்தது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், ‘‘தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா பேசியுள்ளாரே?’’ என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு உதயகுமார், ‘‘எடப்பாடி தலைமையில் இன்றைக்கு மிகப்பெரிய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தமிழ்நாடு மக்கள் வழங்குவதற்கு தயாராகி விட்டனர்.எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எத்தனை, எத்தனை திசை திருப்பினாலும், அந்த விசயத்தில் எடப்பாடியும், நாங்களும் தெளிவாக இருக்கிறோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’’ என பதிலளித்தார்.
சிவகாசியில் நேற்று நடந்த மேற்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘‘எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விடும் இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்க மாட்டார்.ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் கட்சி அதிமுக. எங்களிடத்தில் இருக்கும் சிறுபான்மை மக்களைப் பிரிக்க முடியாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது? தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வர வாய்ப்பு இல்லை. அதிமுக கூட்டணி கட்சிகள்தான் ஆட்சியை பிடிக்கும். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அந்தக் கூட்டணியில் ஒத்தகருத்தும் ஒற்றுமையும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறதென அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


