எடப்பாடி பழனிச்சாமி மகன் கைதாவாரா? – பிரசாத் நீக்கத்தால் பரபரப்பு

சென்னை மயிலாப்பூர் இராதாகிருஷ்ணன் சாலையைச் சேர்ந்தவர் பிரசாத் (33), அதிமுக தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகி. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனின் நெருங்கிய நண்பர்.

முன்னாள் முதலமைச்சரின் மகனின் நண்பர் என்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிரசாத் தனக்கு என தனி அதிகாரத்தை கட்சிக்குள் வளர்த்து வந்தார். நடிகர் கருணாஸ் கட்சியில் இளைஞர் அணி முன்னாள் செயலாளராக இருந்த அஜய் வாண்டையாரை அதிமுகவிற்கு அழைத்து வந்தது பிரசாத் தான்.

அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, உணவக உரிமையாளர் ராஜா ஆகியோர் பெரிய அளவில் மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரசாத், பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக மாவட்ட வாரியாக பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.

கடந்த 22 ஆம் தேதி நுங்கம்பாக்கம் பகுதியில் தனியார் பாரில் மது போதையில் நடந்த தகராறில் தூண்டில் உணவக உரிமையாளர் ராஜா, அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, தொழிலதிபர் கணேஷ்குமார், தனசேகரன் மற்றும் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி பிரசாத் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிமுக நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட நபர்கள் அவர் மீது புகார்கள் அளித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பிரசாத் மீது வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றது, ஐதராபாத் தொழிலதிபருக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க சலுகைகள் வாங்கித் தருவதாகப் பணம் பெற்றது என 3 புகார்கள் வந்துள்ளனவாம்.

மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரசாத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி காவல்துறையில் சில நண்பர்கள் உதவியுடன் மோசடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து, தென் மாவட்டங்களில் ரவுடிகள் கொலை தொடர்பான டவர் லொக்கேஷன் பெற்றது என பிரசாத் மீது பல்வேறு புகார்கள் தற்போது வெளியே வந்துள்ளன.

இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் பிரசாத், அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோரை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இதில் அதிமுக ஐடி விங்க் நிர்வாகியான பிரசாத், முன்னாள் முதலமைச்சர் மகன் மிதுனின் நட்பைப் பயன்படுத்தி அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோருடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு பல கோடி வரை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பிரசாத் வீட்டில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மிதுன் உதவியுடன் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பெற்ற ஆவணங்கள், அஜய் வாண்டையார் மற்றும் ரவுடிகளுடன் சேர்ந்து தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்த ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மோசடிக்கு தனியாகப் பயன்படுத்தி வந்த லேப்டாப் ஒன்றும் காவல்துறையிடம் சிக்கியுள்ளது.

அதில்தான் முன்னாள் முதலமைச்சரின் மகன் தொடர்பான பல முக்கிய தகவல்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளதாம்.

2 நாள் காவல் முடிந்து நேற்று பிரசாத், அஜய் வாண்டையார் உள்ளிட்டோரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்தவழக்கில் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் தொடர்பான ஆவணங்கள் பிரசாத் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஓரிரு நாளில் இவர்களுடன் மோசடிக்கு உடந்தையாக இருந்த அரசியல்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் நடிகர்களிடம், சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி, விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை நடந்தால் எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி வட்டாரம் பேரரதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்….

அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு துணைச்செயலாளராகப் பணியாற்றி வந்த பிரசாத் கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச்செயலாளர், தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மகன் மிதுனை நோக்கி சிக்கல் வருகிறது என்பதையும் இந்த வழக்கில் அவரும் கைது செய்யப்படலாம் என்கிற தகவலை உறுதிப்படுத்தும் வண்ணம் பிரசாத்தை கட்சியிலிருந்து நீக்கியிருக்கும் நடவடிக்கை இருக்கிறது என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Leave a Response