
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை மாற்றப்படுவார் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்றார்போல, தமிழ்நாடு பாஜக தலைவர் போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை அறிவித்தார்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார்.நேற்று முன்தினம் நட்சத்திர விடுதியில் 16 மாவட்டத் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அண்ணாமலை அழைக்கப்படவில்லை. கூட்டத்தில் மாநிலத் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை கேட்டுள்ளார். பின்னர் நேற்று நிர்மலா சீதாராமன் டெல்லி சென்றார். அங்கு அமித்ஷாவிடம் தனது அறிக்கையை அளித்தார்.
இதனால் ஓரிரு நாளில் தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களுக்கு மாநிலத் தலைவர் பதவியை அறிவிக்க மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டியில் முதலிடத்தில் உள்ள நயினார் நாகேந்திரன் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலையில் அவர் மோடி, அமித்ஷா மற்றும் தேசியத் தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
மேலும், இராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒன்றிய அரசின் நிகழ்ச்சியில் நயினார் மட்டும் மேடையில் ஏற்றப்பட்டார். அவருக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது பாஜகவினரால் புதிய அர்த்தத்தோடு பார்க்கப்பட்டது. அண்ணாமலை இராமேஸ்வரத்தில் மோடியை வரவேற்றார். மோடியுடன் மதுரைவரை ஹெலிகாப்டரில் செல்ல விருப்பம் தெரிவித்தார். ஆனால், பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை ஏமாற்றத்துடன் காரில் சென்னை திரும்பி விட்டார்.
புதியதலைவர் போட்டியில் நான் இல்லை என்று வெளிப்படையாக அண்ணாமலை சொன்னாலும் உள்ளுக்குள் மிகவும் கவலையில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக வந்ததிலிலிருந்து அவருக்கு எதிராக பாஜக பிராமணர்கள் அவருக்கு எதிராகச் செயல்பட்டு வந்தனர்.அண்ணாமலையும் அவர்களை இடதுகையால் கையாண்டுவந்தார்.இப்போது தலைவர் பதவி பறிபோகிறது எனும் நிலையில் பிராமணர்களுடன் சமரசமாகப் பேசி மீண்டும் தலைவர் பொறுப்புக்குத் தன்னைப் பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.கடைசி நேர முயற்சியாக அவர் இதில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தத் தகவலும் பாஜகவிலுள்ள பிராமணர்களாலேயே கசியவிடப்படுகிறது.
இதனால் அண்ணாமலை அவர்களைப் போய் நம்புகிறாரே என்று அவருடைய ஆதரவாளர்கள் கவலைப்படுகிறார்கள்.


