
பெங்களூரு டேனரி ரோடு பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்களும் இங்கே வசிப்பதால், டேனரி ரோடு என்றால் குட்டி தமிழ்நாடு என்றே கூறலாம்.அந்த அளவிற்கு தமிழர்கள் அதிக அளவில் வசித்த காரணத்தினால் அரசின் சார்பில் மாதிரி தமிழ்ப்பள்ளிக்கூடங்களை அமைத்தது. அதுபோன்ற ஒரு தமிழ்ப்பள்ளிகூடம்தான், புலிகேசிநகர் தொகுதி குஷால்நகர் வார்டு அசோக்நகரில் உள்ளது.
5ம் வகுப்பு வரை தமிழில் இங்கே கல்வி போதிக்கப்படுகின்றன. இந்நிலையில், தனியார் பங்களிப்புடன் குடிநீர் சுத்திகரிப்பு மையம் துவங்குவதற்கான பணி இரவோடு இரவாக வார்டு கவுன்சிலர் ஏற்பாடு செய்துள்ளார். தகவல் கிடைத்த பொதுமக்கள், இங்கே எதற்காக குடிநீர் சுத்திகரிப்பு மையம் என்று கேட்டபோது, முறையான பதில் எதுவும் கூறவில்லை. தமிழ்ப் பள்ளிக்கூட வளாகத்திற்குள் ஏற்கனவே கன்னட பள்ளிக்கூடமும் செயல்படுகிறது. வருகிற கல்வியாண்டு முதல் ஆங்கில மொழிக் கல்வி போதனையும் துவங்க உள்ள நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் இங்கே அமைந்தால் அது மாணவ மாணவிகளின் நலனை பாதிக்கும் என்பது அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் துரைசாமி, அன்புமணி உள்ளிட்டோர் கூறியதாவது:தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் சுமார் 50 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவர்களுக்கு விளையாடுவதற்கு இடம் இல்லாத நிலையில், தண்ணீர் சுத்திகரிப்பு மையம் எதற்காக அமைக்கவேண்டும் என்பதே எங்களின் ஒரே கேள்வி ஆகும். அரசு தமிழ் துவக்கப் பள்ளிக்கூடத்தை உயர் நிலைப்பள்ளிக்கூடமாக மாற்றி தரவேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை அளித்துள்ளோம். அந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து வரும் நிலையில் தொகுதி எம்.எல்.ஏ. அகண்டசீனிவாசமூர்த்தி மற்றும் கவுன்சிலர் சல்மா ஆகியோர் இரவோடு இரவாக ஜேசிபி எந்திரத்தின் மூலம் சுவரை இடித்துவிட்டு குழிதோண்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? சுத்திகரிப்பு குடிநீர் மையம் வேண்டுமானால் வேறு பகுதியில் அமைத்து கொள்ளமுடியும்.
பள்ளிக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யமுடிமா? கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மையினர் நடத்துகிற பிற பள்ளிக்கூடத்தில் இது போன்று அவர்களால் எதுவும் செய்ய முடியுமா? தலைமுறை தலைமுறையாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். அரசு தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்குள் வேறு எந்த கட்டிடம் அமைக்கவும் அனுமதிக்க மாட்டோம், என்றனர்.தடுத்து நிறுத்துவோம்அரசு தமிழ் மற்றும் கன்னட பள்ளிக்கூடத்திற்குள் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு தோண்டப்பட்ட குழியை முன்னாள் எம்.எல்.ஏ. பிரசன்னகுமார் பார்வையிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், புலிகேசிநகர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றால் அதை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கல்வி நிலையங்களில் அமைத்து கொடுக்கவேண்டும்.
அப்படி எதுவும் செய்யாமல் பள்ளிக்கூடத்திற்குள் குடிநீர் மையம் அமைக்க நினைப்பது மிகவும் தவறாகும். டேனரி ரோடு பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையான அளவில் வசிக்கிறார்கள். பள்ளியில் மாணவ மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அதை உயர்த்துவதற்கு தமிழ் ஆர்வலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஏற்கனவே சிறிய இடத்தில் பள்ளிக்கூடம் செயல்படுகிறது. தமிழ் துவக்கப் பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி எடுத்துள்ள நிலையில் பள்ளிக்கூடமே முடங்கிப் போகும் வகையில் இதுபோன்ற தேவையற்ற பணியில் கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏ. ஈடுபடுவது ஏற்கதக்கது கிடையாது. இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்துவோம், என்றார்.


