இந்தித் திணிப்பை விட மோசமானது சமக்கிருதத் திணிப்பு – மோடி அரசுக்கு கி.வீரமணி கடும்கண்டனம்

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை என்பது சமஸ்கிருதத்தைப் பரப்பும் ஆர்.எஸ்.எஸின் துறையாகவே மாறி விட்டது. இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்துக் கண்டனங்கள் குவியட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் கல்வித் துறையாகிய மனிதவள மேம்பாட்டுத் துறை – முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். கொள்கைத் திணிப்புத் துறையாகவே (பரப்புத் துறையாகக் கூட இல்லாமல்) ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்‘ நடந்து வருவது, நாட்டின் ஒற்றுமைக்கே உலை வைக்கும், முயற்சியாகும்.

முன்பு பாட திட்டத்தில் மூன்றாவது மொழி (மும்மொழித் திட்டம்) என்று ஹிந்தியைத் திணித்ததை எதிர்த்து, தமிழ்நாடு மாத்திரமல்ல, பஞ்சாப், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு தோன்றியதையும் பொருட்படுத்தாது ‘ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்!’ என்பது போன்று,

மூன்றாவது மொழியாக இப்போது நேரடியாக (“செத்த மொழி”க்கு உயிரூட்டி) சமஸ்கிருதமே தொடரும் என்ற அறிவிப்பு, தமிழ்நாட்டில் மீண்டும் பண்பாட்டுப் படையெடுப்புக்களை எதிர்த்து ஒரு அறப்போராட்டம் துவக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தைத் திணித்து வருவதற்கு, தமிழ்நாட்டின் மூத்த தலைவர் கலைஞர் முதல் பல்வேறு கட்சித் தலைவர்களும் நாமும் எதிர்ப்புக் குரல் கொடுத்து, கண்டனத்தைத் தெரிவித்துள்ளோம்.

இந்நிலையில் இன்று வந்துள்ள செய்திப்படி மத்திய மனித வளத்துறையின் கீழ் உள்ள பல்வேறு அமைப்புகளிலும் சர்வமும் சமஸ்கிருத – ஆர்.எஸ்.எஸ். காவிமயமாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக தத்துவக் கவுன்சில் (Indian Philosophical Council) என்ற ஒரு அமைப்பிற்குள் 12 உறுப்பினர்களை மத்திய மனிதவளத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதிஇரானி அவர்கள் நியமனம் செய்துள்ளார். (ஆதாரம் ‘தி எக்னாமிக் டைம்ஸ்’ –  26.2.2016 பக்கம் 3)

பழைய கவுன்சில் உறுப்பினர்களது பதவிக் காலம் (ICPR) 2015 அக்டோபரில் முடிந்து விட்டதால், புதியவர்களை நியமனம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது; அதைப் பயன்படுத்தி இந்த சமஸ்கிருதத் திணிப்பு – தத்துவத் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1.     கர்நாடகத்தின் நியமன MLC ஆன பேராசிரியை
S.R. லீலா (இவர் சமஸ்கிருத துறைத் துணைத் தலைவர் பெங்களூரு பல்கலைக் கழகம்)

2.    பேரா. ஹரேராம் திரிபாதி (டில்லி லால்பகதூர் சாஸ்திரி ராஷ்டீரிய சமஸ்கிருத வித்தியாலயா!)

3.     ஓம் பிரகாஷ் பாண்டே (லக்னோ பல்கலைக் கழக முன்னாள் சமஸ்கிருத பேராசிரியர் ஓய்வு)

4.    வி. குதம்பசாஸ்திரி (சோமநாத் சமஸ்கிருத பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்).
(இவர்கள் எல்லாம் மனு பரம்பரையான பூணூல்காரர்களே! மற்ற  8 பேர்களிலும் பலரும் பார்ப்பனரே)
மற்ற 8 உறுப்பினர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டிலிருந்து கிடையாது; அது மட்டுமா?
இந்திய அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகள் (எட்டாவது அட்டவணையில்) 22.

இதில் மக்களால் பேசப்படாத ஒரே மொழி வடமொழியாகிய  சமஸ்கிருத மொழிதான்.
இந்தியாவின் ஆதி மொழியும்கூட அல்ல இம்மொழி.

அண்மைக்காலம் வரை செம்மொழி (Classical Language) ஆக்கப்படாமலேயே ஆகி விட்டதாக தொடர் பிரச்சாரத்தினால் நின்ற, சென்ற அய்க்கிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் கலைஞர் எடுத்த முயற்சியால், தமிழுக்கு செம்மொழித் தகுதி அதிகார பூர்வமாகக் கிடைத்தபோது, அதைப் பயன்படுத்தியே செம்மொழித் தகுதியைப் பெற்ற  (கூடுதல் போனஸ் மாதிரி) ஒரு மொழிதான் இந்த சமஸ்கிருத வட – ஆரிய மொழியாகும்!

தத்துவ ஆய்வுக்கு தமிழ் அறிஞர்களே இல்லையா?

மேலும் உள்ள 20 மொழிகளில் தத்துவமோ, தத்துவ அறிவுள்ள, அறிஞர்களோ இல்லையா? பஞ்சமா?
இது பச்சையாக இந்துத்துவ ஆட்சி என்பதை சொல்லாமல், பறைசாற்றும் முயற்சிதானே!

மக்கள் வரிப் பணத்தில் இப்படி பல கிழட்டுப் பிரச்சாரம் போலிகளையெல்லாம் பல்லாயிரம் வருமானம் பெறவும், சமஸ்கிருதமயமாக்கவும் தான் தத்துவமா?

திருக்குறளில் இல்லாத, சிவ வாக்கியர் போன்ற சித்தர்கள் கூறாத தத்துவமா?
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மனிதகுலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள தத்துவத்தைவிட   உயர் தத்துவம் வேறு என்ன வேண்டும்?

தத்துவம் என்றால் வெறும் வடமொழி திணிப்புதானா? இதை எதிர்த்துப் பெருங் குரல் எழுப்ப வேண்டும்!

இந்தித் திணிப்பைவிட மிகமிக மோசமானது இந்த வடமொழி – சமஸ்கிருத பண்பாட்டுப் புதுப்பிப்பும் திணிப்பும்!
“பெரும்பான்மையோர் பேசுவதால் ஹிந்தி படிக்க வேண்டும் என்று வாதம் செய்பவர்கள், யாரும் பேசாத சமஸ்கிருத திணிப்புக்கு எதைக் கூறி வக்காலத்து வாங்க முடியும்?

இந்த மக்கள் விரோதச் செயலை எதிர்த்துக் கண்டனங்கள் குவியட்டும்!

 

கி.வீரமணி
தலைவர்

திராவிடர் கழகம்

26.2.2016

சென்னை

Leave a Response