
செம்மரக் கடத்தல் வழக்கில் தகுந்த ஆதாரம் இல்லாததால், தமிழகத்தைச் சேர்ந்த 351 பேரை திருப்பதி நீதிமன்றம் புதன்கிழமை விடுவித்தது. இவர்களில் ஆந்திரச் சிறைகளில் இருந்த 287 பேரும் புதன்கிழமையே விடுதலையாகினர். இதன்மூலம் ஏற்கெனவே ஜாமீனில் இருந்த 64 பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் திருமலை, சேஷாசல வனத்தில் 2013, டிசம்பர் 25-ஆம் தேதி நடைபெற்ற செம்மரக் கடத்தல்காரர்களின் கல்வீச்சில் திருப்பதியைச் சேர்ந்த வனத் துறை அதிகாரிகள் டேவிட், ஸ்ரீதர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 351 பேரை திருப்பதி போலீஸார் அப்போது கைது செய்தனர்.
அவர்களில் 64 பேர் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி இருந்தனர். மீதமிருந்த 287 பேர் கடப்பா, திருப்பதி, சித்தூர் சிறைகளில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு, புதன்கிழமை வெளியிடப்பட்டது.
வழக்கை விசாரித்த திருப்பதி மூன்றாம் கூடுதல் நீதிமன்ற நீதிபதி ராம்பாபு, அரசுத் தரப்பில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்ட 351 பேரையும் விடுவிப்பதாகத் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, ஜாமீனில் விடுதலையானவர்கள் தவிர்த்து, ஆந்திரச் சிறைகளிலிருந்த 287 பேரும் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
இதன்மூலம் ஜாமீனில் இருந்த 64 பேரும், சிறைகளிலிருந்த 287 பேரும் ஆக மொத்தம் 351 இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.


