
மலேசியாவைச் சேர்ந்தவர் நடிகை சாந்தினி. இவர், சமுத்திரக்கனி இயக்கிய‘நாடோடிகள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் தன்னை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஜெயலலிதா ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடனான மோதல் போக்கால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
அப்போது முதல் அரசியலில் மணிகண்டன் அரசியலில் ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில் தன்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் ஏமாற்றுவதாக நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.
“முன்னாள் அமைச்சரான மணிகண்டன், என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 5 ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வருகிறார்.
தற்போது திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூலிப்படையை வைத்துக் கொலை செய்துவிடுவேன் என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார்” என்றும் சாந்தினி குற்றம்சாட்டியுள்ளார்.
இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் மற்றும் மிரட்டல் விடுத்த குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
2019 ஆகஸ்ட் 7 ஆம் தேதி திடீரென அப்போதைய அமைச்சர் மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதற்கு இந்தச் சிக்கல்தான் காரணமாக இருந்திருக்கும், இது வெளியில் தெரிந்தால் ஆளும்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படலாம் என்பதால் மூடி மறைத்து விட்டார்கள், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இச்சிக்கல் வெளிவந்திருக்கிறது என்கிறார்கள்.
இதனால் அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
