
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டவர்களில் அம்மாநிலத்தின் இரு முன்னாள் முதலமைச்சர்களும் அடங்குவர்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனை ஸ்ரீநகரில் உள்ள பிபிசி செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் உறுதிபடுத்தினார்.
ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும்வரை இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதுடன், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்படும். ஸ்ரீநகர் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட பின்னர் நள்ளிரவில் ட்வீட் செய்த ஒமர் அப்துல்லா, “காஷ்மீரில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால், அல்லாவின் அருளால் நல்லதே நடக்கும் என்று நான் வலிமையான நம்புகிறேன். அனைவரும் அமைதி காக்கவும், பாதுகாப்புடன் இருக்கவும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இரண்டாவதாக பின்னர் ட்வீட் செய்த அவர், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நன்மை பற்றி கவலைப்படாதவர்கள்தான், இங்கு வன்முறை செய்வார்கள். ஆனால் நான் நம்பிக்கையை இழக்கத் தயாராக இல்லை” என்றும் கூறியுள்ளார்.
மேலும் பிர் பஞ்சல் மற்றும் செனாப் பள்ளத்தாக்கில் வாழும் மக்களை நினைத்தால் கவலையாக உள்ளது என்றும் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தப் பகுதிகள் வகுப்புவாத வன்முறை முயற்சிகளால் எளிதாக பாதிக்கப்படலாம். அரசாங்கம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள மெஹபூபா முஃப்தி, “காஷ்மீரில் அமைதிக்காக போராடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் வீட்டுச்சிறையில் இருப்பதை பார்க்கும்போது எவ்வளவு முரணாக உள்ளது. மக்களும் அவர்களின் குரல்களுக்கும் இங்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதை இந்த உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. மதசார்பற்ற ஜனநாயக இந்தியாவை தேர்ந்தெடுத்த காஷ்மீரில் நிலவும் இந்த அடக்குமுறை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.
காஷ்மீரின் இந்த நிலையைக் கொண்டாட்டத்துடன் பார்ப்பவர்களுக்கு இதன் விளைவுகள் தெரியவில்லை என்றும் மெஹ்பூபா கூறியுள்ளார்.
மேலும் வாஜ்பேயி பாஜக தலைவராக இருந்தபோதிலும், “காஷ்மீர் மக்களைப் புரிந்துகொண்டு அவர்களின் அன்பை பெற்றார். இன்று அவர் இல்லாததை நாங்கள் அதிகம் உணர்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


