
2007 ஆம் ஆண்டு வெளியான மொழி படத்துக்குப் பிறகு திருமணம் குடும்பம் குழந்தைகள் என்று இருந்த ஜோதிகா திரும்பவும் நடித்துள்ள படம் 36 வயதினிலே. மலையாளத்தில் வெற்றி பெற்ற ஹவ் ஓல்ட் ஆர் யூ என்கிற படத்தைத் தமிழுக்கேற்றவ்வறு மாற்றி எடுத்திருக்கிறார்கள். மலையாளப் படத்தை இயக்கிய ரோசன் ஆண்ட்ரூஸே தமிழிலும் இயக்கியிருக்கிறார். மொழி படத்துக்கு வசனம் எழுதிய இயக்குனர் விஜி, இந்தப்படத்துக்கும் வசனம் எழுதியிருக்கிறார். இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீடு ஏப்ரல் 6 அன்று சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா. ஜோதிகா, சிவகுமார், அவர் மனைவி லட்சுமி, கார்த்தி ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாடல்களை சூர்யாவின் மகள் தியா வெளியிட, அவருடைய மகன் தேவ் பெற்றுக் கொண்டான். படத்தின் முன்னோட்ட காட்சிகளை நடிகர் கார்த்தி வெளியிட்டார். ஒரு பாடலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டார்.

சூர்யா பேசும்போது, படம் தயாரிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை, ஒரு நல்ல படத்தை தயாரித்திருப்பது நிறைவாக இருக்கிறது என்றதோடு, ஜோதிகா தமிழில் மிக நன்றாகப் பேசியதைப் பாராட்டும் விதமாக முதுகை வளைத்து வணக்கம் சொன்னார்.
ஜோதிகா பேசும்போது, கணவருக்கு நன்றி சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். சூர்யாவை கணவராக அடைந்ததை பெருமையான விஷயமாக கருதுகிறேன். சூர்யாதான் என்னுடைய உலகம். நான் சென்னை வந்ததும் முதன்முதலில் சந்தித்த நபர் சூர்யாதான். சினிமாவில் சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றியிருந்தாலும், வஸந்த் சார் வழிநடத்தலில் எனக்கு மேலும் பெருமையை தேடிதந்தது.மேலும் எனக்கு ஆதரவாக இருக்கும் மாமா அத்தைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி இந்த படத்தை என்னால் பண்ண முடியும் என்று ஊக்குவித்த என்னுடைய நண்பர்களுக்கும் நன்றி என்றார்.
இயக்குனர் வெங்கட் பிரபு பேசுகையில், மனைவியைத் திருப்தி செய்வது சாதாரண விசயமில்லை அதை சூர்யா சிறப்பாகச் செய்துவிட்டார். சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும். இதை நான் ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்றார். அப்போது சூர்யா அதை ஆமோதிப்பது போலத் தலையாட்டினார். அதைப் பார்த்த வெங்கட்பிரபு அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று நினைப்பதாகச் சொன்னார்.
