
கரியாம்பட்டி ஸ்டுடியோஸ், ஏடிஎம் புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம்“சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ”
அறிமுக இயக்குனர் மருதுபாண்டியன் இயக்கியிருக்கிறார். பாபி சிம்ஹா, பிரபஞ்சன், லிங்கா, புதுமுகம் சரண்யா நடிக்கும் இப்படத்தை சென்னையின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சில கிராமங்களிலும் படமாக்கியிருக்கிறார்கள்.
‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ இச்சொற்றொடரின் மகத்துவம் அறிந்தோர் பலர் உள்ளனர் எனினும் உணர்ந்தோர் சிலரே. இங்கு உழைக்கத் தெரிந்தவன் பிழைத்துக் கொள்வான். இத்தகைய பெருமிதத்தின் நடுவே பெயர் தெரியா ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞர்கள் பலர். இவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு திரைப்படம் “சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது”. “சாலையோரக் கடை இட்லியின் சூட்டால் நாக்கை புண்ணாக்கி கொண்டு, அடிக் கதவு இல்லா கழிவறை, ஆறுக்கு இரண்டு அளவே கொண்ட அறைகளில் கனவு காணும் சென்னைவாழ் இளைஞர்களின் கதை இது. என் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களின் நகைச்சுவை நிறைந்த கோர்வையே இந்தத் திரைப்படம் என்கிறார் இயக்குனர் மருதுபாண்டியன்.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாபிசிம்ஹா, தனக்கு 25 இலட்சம் பணம் தரவேண்டும் அல்லது படத்தின் வருவாயில் பாதி தரவேண்டும் என்று கேட்டாராம். இதனால் அவர் ஐந்துநாட்கள் நடிக்கவேண்டிய காட்சிகளை அவர் இல்லாமலே புத்திசாலித்தனமாகப் படமாக்கியதோடு படப்பிடிப்பில் அவர் பேசியதை வைத்தே குரல்பதிவையும் முடித்துவிட்டார்களாம்.
மோகன்லால் நடித்து மலையாளத்தில் வந்த படம் உதயநானுதாரம், தமிழில் வெள்ளித்திரை என்கிற பெயரில் அந்தப்படம் வெளியானது. படத்தில் நடிக்கமுடியாதென நாயகன் மறுக்க அவரை நூதனமுறையில் ஏமாற்றிப் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடித்து வெளியிடுவதுதான் அந்தப்படத்தின் கதை. கிட்டத்தட்ட அந்தப்படத்தின் கதை போல உண்மையில் இப்போது நடந்திருக்கிறது.


