
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் 30 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், நவம்பர் 17,2017 அன்று இரவு 9.30 மணிக்கு சோதனை நடத்தினர்.போயஸ்கார்டனில் குறிப்பாக சசிகலா பூங்குன்றன் ஆகியோர் பயன்படுத்திய அறைகளில் சோதனை நடைபெற்றது. நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று இந்தச் சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து இன்று (நவம்பர் 18,2017) காலை தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
எனது உறவினர் ஷகிலா ராஜராஜனை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வரவைத்து பின் அங்கிருந்து போயஸ்கார்டன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே பல இடங்களில் சோதனைகளை நடத்திவிட்டு, ஜெயலலிதா அறையை சோதனை செய்யவேண்டும் என வருமான வரித்துறையினர் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு ஷகிலா ஜெயலலிதா அறையை சோதனைசெய்ய வாரண்ட் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் இல்லை, 10 நிமிடத்தில் வாங்கித் தருகிறோம் என கூறியுள்ளனர். அதற்கு ஷகிலா, நீங்கள் வாரண்ட் வாங்கினாலும் எனது உறவினர் தினகரன் இல்லாமல் அறையை சோதனைசெய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் அரசியலில் உள்ள ஒருவர் வந்தால் தேவையில்லாத பிரச்சனை வரும். வேறு யாராவது ஒருவரை வரச் சொல்லுங்கள் என கூறியுள்ளனர். அதற்குள் எனது உறவினர் ஷகிலா ராஜராஜனின் சகோதரர் விவேக் அங்கு சென்றுவிட்டார். வருமான வரித்துறையினர் ஜெயலலிதா அறைக்குள் செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் செல்லவில்லை.
சசிகலாவின் அறையை சோதனை செய்துள்ளனர். அங்கிருந்து 2 பழைய லேப்டாப், பெண்டிரைவ், ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக விவேக் என்னிடம் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றரை கோடி தொண்டர்களின் புனிதத்தளமாக விளங்குவது ஜெ.வின் இல்லம். அங்கு சோதனை மேற்கொண்டிருப்பது எல்லோருக்கும் மனவருத்தத்தைத் தருகிறது. வருமான வரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது எனக் கூறினாலும் அது மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள ஒரு துறைதான். அதிலுள்ள அதிகாரிகள் எல்லாம் மத்திய நிதியமைச்சர் மூலம்தான் மாற்றப்படுகிறார்கள்.
மத்திய நிதியமைச்சரோ, பிரதமரோ ஜெயலலிதாவை தங்கள் நண்பர் என்று கூறுவார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நண்பர் என்று கூறும் பிரதமர் அவர்கள் வந்து பார்க்கவில்லை. கலைஞரை நேரில் சந்தித்தபோது கூட இதனை அரசியலாக பார்க்கவில்லை. ஆனால், இன்று ஜெயலலிதா அறையில் சோதனை செய்யவேண்டும், வாரண்ட் வாங்கி வருகிறோம் என கூறுவதை எல்லாம் பார்க்கும்போது, இதில் நிச்சயமாக ஏதோ சதி இருக்கிறது என நான் கூறுகிறேன்.
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் இது ஜெயலலிதாவின் ஆட்சி என்கிறார்கள். பழனிசாமி வார்த்தைக்கு வார்த்தை ஜெ., ஆட்சி என்கிறார். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் சோதனை வாரண்ட் வாங்கியபோது அமைதிகாத்துள்ளனர். பன்னீர்செல்வமாக இருக்கட்டும், அமைச்சர்களாக இருக்கட்டும், ஒருவர்கூட அந்தப் பகுதிக்கு வரவில்லை. ஜெயலலிதாவின் வீடு இருக்கும் திசைநோக்கி வணங்குகிறேன் என்று கூறியவர்கள் எல்லாம் அவர்கள் எப்படி சுயநலத்திற்காகவும், சுயபயத்தினாலும் தங்களுக்கு ஏதாவது ரெய்டு வந்துவிடுமோ, எப்படியாவது பதவியில் ஒட்டிக்கொண்டால் போதும் என இந்த சோதனைகளுக்கு எல்லாம் ஒரு சின்ன குரல்கூட கொடுக்காமல் இருக்கிறார்கள். இதில் நிச்சயம் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. இதற்குமேல் நான் சொல்லித்தான் எல்லோருக்கும் தெரியவேண்டிய அவசியமில்லை. எப்படியாவது அரசியலில் எங்களை இல்லாமல் செய்திடவேண்டும், அப்படிச் செய்தால் தங்களுக்கு நன்மை என்று வருமானவரித்துறையை ஏவி விடுகிறார்கள்.
பழனிசாமி சொன்னதுபோல், ஜெயலலிதாவின் ஆத்மா யாரை மன்னிக்காது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி, அதுபோல ஆயுதம் எடுத்தவர்கள், எந்த ஆயுதம் எடுத்தாலும் சரி, அதை எடுப்பவர்களுக்கு அதில்தான் வீழ்ச்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இருப்பது ஓர் உயிர், போவது ஒருமுறை நாம் வீரர்களாகத்தான் போராடுவோம். தொண்டர்களின் நலனுக்காகவும் இயக்கத்தை காக்கவேண்டும் என்பதுவும்தான் எங்களின் குறிக்கோள். இதற்காக நாங்கள் எந்த தியாகத்தையும் சந்திக்கத் தயாராக உள்ளோம். தினகரன் பயப்படுகிறார், பதறுகிறார் என்கிறார்கள். நாங்கள் இதைக் கண்டு எல்லாம் அஞ்சுபவர்கள் இல்லை. சோதனை நடப்பதால் குற்றவாளி என்று கூறிவிடமுடியாது.
என்னைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவின் அறையில் வைரக்குவியலும், தங்கக்கட்டிகளும், சேகர்ரெட்டி வீட்டில் கிடைத்ததுபோல் பல கோடி ரூபாய் இருக்கலாம் என்ற எண்ணத்தில் வந்தவர்கள். ஏனோ அதைத் திறந்து பார்க்காமல் சென்றுவிட்டனர். போயஸ் இல்லத்தில் சோதனை என்று தெரிந்ததும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு கூடியிருந்தார்களே அவர்கள்தான் உண்மையான தொண்டர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


