
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்து காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் பட்டதாரிஆசிரியர் பணிநியமனம் வழங்கவேண்டும் என்பது உட்பட பல நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்பதுநாட்களாக மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேலைகொடுங்கள் என்றுதான் அவர்கள் போராடிவருகின்றனர். ஆனால் இவர்களைச் சந்திக்கக்கூட மறுத்துக்கொண்டிருக்கிறது தமிழகஅரசு.
பார்வையற்றவர்கள் விசயத்தில் இப்படிப் பாராமுகமாக இருக்கும் தமிழகஅரசுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும்கண்டனங்களைத் தெரிவித்தபோதும் தமிழகஅரசின் கண்கள் திறக்கவில்லை. இந்தஉலகத்தைக் கல்விகண்கொண்டு பார்ப்பதோடு கல்விச்செல்வத்தை அனைவருகும் வழங்குவதற்குக்கூடப் போராடவேண்டிய நிலையில் இவர்களை வைத்திருக்கும் தமிழகஅரசை எண்ணி வெட்கித்தலைகுனியவேண்டியுள்ளது.
முக்கியஎதிர்க்கட்சிகள் எல்லாம் இந்தவிசயத்தில் பேசியும் அரசு அசையவில்லை. அதிமுகவின் நம்பத்குந்த கூட்டாளியாக சரத்குமாரும் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவது நமக்கு வேதனையை அளிக்கிறது. அவர்களும் நம்மில் ஒருவர், அவர்களுக்கு நாம் உதவாவிட்டால் வேறு யாரால் உதவமுடியும். அவர்களின் கோரிக்கையை நன்கு பரிசீலித்து நிறைவேற்றித்தரவேண்டுமென்று தமிழகஅரசையும் அதிமுக பொதுச்செயலாளரையும் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
எதிர்க்ட்சிகளை எதிரிக்கட்சிகளாகப் பார்க்கும் தமிழகஅரசு, அதிமுகவின் நன்மைக்காகப் பேசிவருகிற சரத்குமாரின் கோரிக்கையை ஏற்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கு நன்மை செய்தால் நல்லது. இல்லையெனில்.
தமிழக அரசும் அதை மறைமுகமாக நிர்வகித்துவரும் ஜெயலலிதாவையும் அம்மக்களின் சாபம் சும்மாவிடாது என்று பலரும் சொல்வது பலித்துவிடும்.
