முற்போக்காளர் என்று பீற்றிக்கொள்ளும் கமலுக்கு இது அழகல்ல – விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் நெறிப்படுத்துகிறார். அந்நிகழ்ச்சிக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வருகின்றன. அப்படி வவைத்து நிகழ்ச்சியைப் புகழ்பெற வைப்பதுதான் நிறுவனத்தின் திட்டம் என்கிறார்கள். அந்நிகழ்ச்சியில் சேரி பிகேவியர் என்று நடிகை காயத்ரிரகுராம் சொன்னதற்குக் கடும் கண்டனங்கள் வருகின்றன. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முன்னணியினர்களில் ஒருவரான வன்னிஅரசு அதைக்கடுமையாகச் சாடியுள்ளார். அவருடைய பதிவில்,

கமலுக்குத் தெரியாமலா இருக்கும்?
………………………………………………………..
“சேரி behaviour “என்று ஒரு நடிகை இன்னொரு நடிகையைச் சொல்லியுள்ளார். எதையாவது பரபரப்பாகப் பேசி தொலைக்காட்சியின் ரேட்டிங்கை ஏற்றுவது அல்லது நிகழ்ச்சியை பெரிதாக விளம்பரப்படுத்துவது என்பது
மலிவான- கேவலமான உத்தி.

நடிகர் கமலகாசன் முற்போக்காளர்-பகுத்தறிவாளர் என்றெல்லாம் பீற்றிக்கொள்ளுகிறார். அவர் நெறியாளுகை நடத்தும் அந்த நிகழ்ச்சியில் இப்படி ஒரு உரையாடல் இருக்கிறது என்பதைத் தெரிந்தே அதை ‘promo’ போடுவது-அதை அனுமதிப்பது என்பது நடிகர் கமலுக்கு அழகல்ல. அந்த மலிவுக்கு ஒத்துப்போவதாகதான் பொருள்!

கமலின் இந்தப் போக்கு அந்த நடிகையின் ( காயத்ரி ) போக்கை விட மோசமானது.

இது ஒரு புறம் இருக்க,

சேரி behaviour என்பது தமிழ்ச் சமூகத்தின் மிக சிறந்த பண்பாடு என்பது பெருமைக்குரிய விடயம். இன்னமும் தமிழ்மொழி அங்கே தான் மிச்சமிருக்கிறது. சேரியில் தான் இன்னமும் கூட்டுக்குடித்தனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சேரியில். தான் இன்னமும்
சகிப்புத்தன்மை இருக்கிறது. சேரியில் தான் இன்னமும் மனிதநேயமும் இரக்க குணமும் பரவி கிடக்கிறது.

இப்படிப்பட்ட behaviour அக்ரகாரத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. அக்ரகாரத்தில் மட்டுமல்ல ஆதிக்கச் சமூகங்களிடமும் கூட இல்லை.

சேரி என்றாலே சேர்ந்து வாழ்தல், கூடி வாழ்தல் என்பது தான் பொருள். ஆகவே தான் சேரி பண்பாடு தமிழர்களின் மூத்த பண்பாடு என்று வரலாறு நமக்கு சொல்லித்தந்துள்ளது.இந்தப் பண்பாட்டை அக்ரகாரங்களும் அதன் அடிமை சாதிகளும் சீர்குலைக்க பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

உதாரணத்திற்கு ” பற புத்தி அர புத்தி” என்று கிண்டலடிக்கின்றனர். அதாவது பறையர்களின் புத்தி அரைகுறையானதாம். ஆனால், நமது முன்னோர்கள் பவுத்த வழி வந்தவர்கள் “பறையர்களின் புத்தி என்பது அறம் சார்ந்த புத்தி ”
என்பதைத் தான் சாதியவாதிகள் பற புத்தி அர புத்தி என்று திரித்து பரப்புரை செய்து வருகின்றனர்.

ஆகவேதான் இந்த மலிவான விளம்பரத்திற்கு நாம் பலியாகிடக்கூடாது.

நாம் எப்போது கோபப் படவேண்டும் என்பதை நாம் தான் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் எப்போது யுத்தக்களத்துக்குப் போக வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அவாள்களும் அவாள்களின் அடிமைகளான சாதி இந்துக்கள் அல்ல.

ஆகவே, உணர்ச்சி வசப்படாமல் நாம் களமாடி பயணத்தைத் தொடருவோம்!
அந்த நடிகைக்குப் பின்னால் இருக்கிற கார்பரேட்கள், சாதியவாதிகள், முற்போக்கு முலாம் பூசிக்கொண்டு அலையும் கமல் போன்றவர்களை அம்பலப்படுத்துவோம்!

இவ்வாறு வன்னி அரசு எழுதியுள்ளார்.

Leave a Response