
10 ரூபாய்க்கு ஆவின்பால்” ஏற்கெனவே இருக்கும் திட்டத்தை “புதிய திட்டம் போல் அறிவித்தது மக்களை ஏமாற்றும் செயல் என்றும்,”பால் கலப்பட சிறப்புத் தடைச்சட்டம்” குறித்த அறிவிப்பு இல்லாத பால் மானியக் கோரிக்கை “சத்தில்லாத கலப்படப் பால் போன்றது” என்றும் பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,,,
தமிழக சட்டப்பேரவையில் 11.07.2017 அன்று “பால் மானியக் கோரிக்கை” விவாதத்தின் போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை, எளிய மக்கள் சத்துள்ள பால் அருந்திட ஏதுவாகவும், தனியார் பால் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கவும் “225மிலி அளவுள்ள ஆவின் பால் பாக்கெட்டுகள் 10.00ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்படும்” என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பானது மக்களை ஏமாற்றுகின்ற, குழப்புகின்ற அறிவிப்பாகும்.
ஏனெனில் தற்போது தமிழகத்தில் ஆவின் நிறுவனம் “நிலைப்படுத்தப்பட்ட 200மிலி அளவுள்ள பால்” பாக்கெட்டுகளை பெரும்பாலான மாவட்டங்களில் 9.00ரூபாய்க்கும், சில மாவட்டங்களில் “250மிலி அளவுள்ள பால்” பாக்கெட்டுகளை 10.00ரூபாய்க்கும், மேலும் ஒரு சில மாவட்டங்களில் 10.50 மற்றும் 11.00ரூபாய்க்கும் (அதிகபட்ச சில்லறை விற்பனை விலை MRP) பால் முகவர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ஏற்கனவே நடப்பில் இருக்கின்ற ஒரு நிலையை இல்லாதது போன்று காண்பித்து, தற்போது தான் புதிதாக அறிமுகம் செய்வது போன்ற மாயையை தமிழக சட்டப்பேரவையில் உருவாக்கி தவறான முன்னூதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள்.
மேலும் இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டு அதன் மூலம் பொதுமக்களிடம் நற்பெயர் தேட முயற்சி செய்திருக்கிறார். அதற்கு எங்களது “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கெனவே பெரும்பாலான மாவட்டங்களில் 200மிலி (9.00ரூபாய்) & 250மிலி (10.00ரூபாய் / 10.50 / 11.00ரூபாய்) பால் பாக்கெட்டுகள் ஆவின் நிறுவனத்தில் நடைமுறையில் இருக்கும் போது அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலந்து பேசிய பிறகு இந்த அறிவிப்பினை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டாரா? அல்லது ஆவின் நிறுவனத்தில் உள்ள நடைமுறை குறித்து எதுவும் தெரியாமல் அவரே தன்னிச்சையாக இந்த அறிவிப்பினை வெளியிட்டாரா? என தெரியவில்லை. அமைச்சரின் அறிவிப்பு குறித்து பார்க்கும் போது பால்வளத்துறை அதிகாரிகளோடு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு இணக்கமான சூழல் நிலவவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எனவே பால்வளத்துறை அமைச்சரின் அறிவிப்பு குறித்து “பால்வளத்துறை செயலாளர்” மற்றும் “ஆவின் நிர்வாக இயக்குனர்” ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எங்களது சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
அதுமட்டுமன்றி பொதுமக்கள் நலன் சார்ந்து கலப்பட பாலை உற்பத்தி செய்பவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கின்ற வகையில் அந்தந்த மாநில அரசுகள் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட சூழ்நிலையில் நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலாவது “பால் கலப்பட சிறப்புத் தடைச்சட்டம்” குறித்த அறிவிப்பும், பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 30லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நலன் காத்திட “தனிநலவாரியம்” அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு நாங்கள் முன் வைத்து வரும் கோரிக்கை குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்த்த சூழ்நிலையில் அது குறித்த அறிவிப்புகள் ஏதும் பால் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது இடம் பெறாதது கோடிக்கணக்கான பொதுமக்களையும், பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 30லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களையும் ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. மொத்தத்தில் இந்த பால் மானியக் கோரிக்கை என்பது ஏமாற்றங்கள் நிறைந்ததாகவே அமைந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


