
தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்தத் தகவலை முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அமெரிக்காவும் இலங்கையும் இது தொடர்பான இணக்கப்பாட்டை எட்டியுள்ளன என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கைக் கடற்படையினருக்கு பயிற்சி வழங்குதல் என்ற போர்வையில் அமெரிக்கக் கடற்படையினர் இலங்கைக்குள் நுழையவுள்ளனர். திருகோணமலை துறைமுகத்தை அடிப்படையாகக்கொண்டே இந்தப் பயிற்சி நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இலங்கையும் அமெரிக்காவும் இதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளன என்று ஓரிரு மாதங்களுக்கு முன் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
சர்வதேசச் சக்திகள் இன்று இலங்கைக்குள் மிக இலகுவாக நுழைந்து அதன் தேவையை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு இடங்கொடுத்துள்ளது. நாம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம். இந்த ஆபத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.
இவர், திருகோணமலைக்குள் அமெரிக்கா நுழைவது சிங்களர்களுக்கு ஆபத்து என்று சொல்கிறார். உண்மையில் அது இந்தியாவுக்குத்தான் ஆபத்து என்று இந்திராகாந்தி காலத்திலேயே பேசப்பட்டது.
அப்போதைய, ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்தின் எல்லைமீறிய அமெரிக்க சார்பு நிலையைப் பார்த்துப் பதற்றப்பட்ட இந்திராகாந்தி, தனது புவிசார் நலன்கள், பொருண்மிய ஒத்துழைப்பு, சிறிலங்காவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் என்பவை தனது நலனுக்கு எதிராக இல்லாமலிருப்பதை உறுதிப்படுத்தல் போன்றவற்றை சிந்தையில் கொண்டு, ஈழப்போராளிக் குழுக்களைப் பயிற்றுவித்து ஆயுதங்களும் நிதியுதவியுமளித்து போராளிக்குழுக்களை ஏவி விட்டுத் தனது கூலிப்படையாகப் பயன்படுத்துவதன் மூலம், அமெரிக்க சார்பு ஜே.ஆரின் அரசாங்கத்திற்கு கீழிலிருந்து ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கி, சமரசம் செய்வது போலத் தலையிட்டுத் தனது சிறிலங்கா மீதான மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதென கங்கணம் கட்டிச் செயற்பட்டது என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்வர்.
முன்னாள் சிங்கள அமைச்சரின் தற்போதைய பேச்சைப் பார்த்தால் இந்திராகாந்தி பயந்தபடி இந்தியாவுக்கு ஆபத்து நேருமோ என்கிற அச்சம் உருவாகிறது.


