
ரஜினிக்கு
மனமார்ந்த நன்றி தெரிவித்து தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
பெருமதிப்புக்குரிய நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது இலங்கை பயணத்தைத் தவிர்த்திருப்பது அவரது பெருந்தன்மையையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.
வறட்டுக் கவுரவம் பார்க்காமல், வீண்பிடிவாதம் செய்யாமல், எவருடையத் தூண்டுதலுக்கும்
இரையாகாமல், மிகவும் தன்னியல்பான வகையில், எமது வேண்டுகோளை ஏற்று, தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து, இலங்கை செல்லும் திட்டத்தைக் கைவிட்டிருக்கிறார் திரு. ரஜினிகாந்த் அவர்கள். அவரின் இந்த முடிவு அவர் மீதான நன்மதிப்பை மேலும் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. அவர் மாற்றார் பேச்சைக் கேட்டு முடிவெடுப்பவரல்ல; சுயமாக சிந்தித்து முடிவெடுப்பவர் என்பது இம்முடிவிலிருந்து உணரமுடிகிறது.
நாம் இந்தவேண்டுகோளை விடுத்ததில் அரசியல் உள்நோக்கமோ விளம்பர நாட்டமோ ஏதுமில்லை. ஈழத்து மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்தான் வெகுமக்களின் ஊடகங்கள் வாயிலாக இந்த வேண்டுகோளைப் பொதுவெளியில் முன்வைத்தோம். இதனைச் சிலர் வழக்கம் போல கொச்சைப்படுத்துகின்றனர். ஆனால், அவர்களைப்போல திரு. ரஜினிகாந்த் அவர்கள் எமது வேண்டுகோளைக் குதர்க்கமாகப் பார்க்கவில்லை என்பதை அவரது முடிவு உறுதிப்படுத்துகிறது.
தற்போதைய அரசியல் சூழலில்
திரு.ரஜினிகாந்த அவர்கள் ஈழம் வருவது, தமிழர் விரோத நடவடிக்கைகளை மூடிமறைக்கும் சிங்கள இனவெறியர்களின் முயற்சிக்குத் துணை போவதாக அமைந்து விடுமென்பது தான் ஈழத்தமிழர்களின் ஒரே அச்சமாகும். மற்றபடி, அவர் ஈழத்திற்குப் பயணம் செய்வதையோ, பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் காண வேண்டுமென்பதையோ யாரும் எதிர்க்கவில்லை. எதிர் காலத்திலும் அப்படி எதிர்க்க வாய்ப்பில்லை.
ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் சிங்கள இனவெறி அரசை நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் கண்டித்துள்ளன. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளையோ, போர்க்குற்றங்கள் மீதான பன்னாட்டு நீதிபதிகளைக்கொண்ட உள்ளக விசாரணையையோ செய்யவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிக் கண்டனம் செய்துள்ளன. வழக்கம்போல இந்தியாவும் பாகிஸ்தானும் சிங்களவர்களுக்கு ஆதரவாக நின்றுள்ளன.
இந்நிலையில் தான், சிங்களவர்களுக்கு நெருக்கமான ‘லைக்கா’ நிறுவனத்தினர் தமிழர்களுக்கென கட்டப்பட்டுள்ள 150 வீடுகளைத் திறக்கும் விழாவுக்கு
திரு.ரஜினிகாந்த் அவர்களை அழைத்துள்ளனர். உலகத் தமிழர்களிடையே மிகுந்த செல்வாக்குமிக்கவாராக விளங்கும் அவரைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்திய- சிங்கள அரசுகள் ‘லைக்கா’ நிறுவனத்தின் மூலம் மறைமுகமான முயற்சியில் ஈடுபடுகின்றனவோ என்கிற அச்சமே இந்த எதிர்ப்புக்கு அடிப்படையாகும்.
இதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டு திரு.ரஜினிகாந்த் அவர்கள், பெரும் பொருட்செலவிலான ஏற்பாடுகளைச் செய்து தனக்கு அழைப்பு விடுத்த, தனது ‘2.0’ என்னும் படத்தயாரிப்பாள்களின் வருத்தத்தையும் பொருட்படுத்தாமல், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு முதன்மையிடம் அளித்து, இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவை எடுத்த சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில், எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி


