சில இஸ்லாமிய சகோதரர்கள் மதஅடிப்படைவாதிகளுக்குப் பாடம் எடுக்கட்டும்- கொளத்தூர் மணி அறிக்கை


திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஃபாரூக் அவர்கள் கடந்த 16.03.2017 அன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளே அவரைக் கொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் பல்வேறு விவாதங்கள் நடந்துகொண்டிரக்கின்றன. அதையொட்டி திராவிடர்விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

இசுலாமிய சமுதாயத்திற்கும் எமக்குமான உறவு தொப்பூள் கொடி உறவு.அதனை யாராலும் பிரிக்க முடியாது.

மறைந்த பழனிபாபா அவர்கள்‘’நான் இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், மார்க்கத்தால் இசுலாமியன்’’ என பிரகடனப்படுத்தினார்.

சிறுபான்மை மக்களுக்கும், பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருக்கும் இந்து மத நம்பிக்கையுள்ள பார்ப்பனர் அல்லாத எம் உறவுகளுக்கும் எதிரான காவி மதவெறி பாசிசமே எமது முதன்மை எதிரி.

பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வுகளைக் கற்பிக்கும் பார்ப்பன சனாதன வேத மதமே முதலில் ஒழிக்கப்பட வேண்டிய மதம். பெரியாரும், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரும் உழைத்தது சம உரிமையை மறுக்கும் வேதமதத்திற்கு எதிராகத் தான்.

தீண்டாமையை ஒழிக்க இசுலாம் மார்க்கத்தை பெரியார் பரிந்துரைத்தார். 5.00 மணிக்கு இசுலாமியனாக மாறினால் 5.05க்கு உன் தீண்டாமை போய் விடும் இவ்வளவு விரைவில் தீண்டாமையை போக்கும் வேறு வழியில்லை எனக் கூறினார்.

பெரியாரின் நாத்திகத்தின் முதன்மை நோக்கம் “ஜாதி ஒழிப்பே”. பெரியார் அறிவியல் நோக்கில் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்தவர் அல்லர். ஜாதியை ஒழிக்கும் சமுதாய நோக்கத்திற்காக கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை செய்தவர் பெரியார். உன் ( இந்து ) கடவுள் ஜாதி காப்பாற்றும் கடவுள்; அதனால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் உன் கடவுளை ஒழித்தாக வேண்டும் என்றார்.

பெரியார் அடியொற்றி பயணிக்கும் எமக்கு இது பாலபாடம்.

இப்போது தோழர் ஃபாரூக் அவர்களின் கொலையை முன்வைத்து ஏதோ இசுலாமிய மக்களுக்கும் பெரியாரியர்களுக்கும் மனக்கசப்பு என்று எழுதும் சிலரும் மேற்சொன்ன அடிப்படைகள் புரியாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

இசுலாமிய சிறுபான்மை மக்களுக்கு எதிரான காவி பயங்கரவாதத்திற்கு எதிரான படை வரிசையில் தமிழ்நாட்டில் பெரியார் தொண்டர்கள் முன் வரிசையில் என்றென்றும் நிற்பார்கள். அது ஏற்றுக் கொண்டிருக்குக்கும் பெரியாரியலின் அடிப்படை கடமை என்பதை மீண்டும் விளக்கத் தேவையில்லை.

இப்போது தோழர் ஃபாரூக் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சூழலில் எழும் விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகளை முன்வைத்து சில முற்போக்கு வேடமிட்டிருக்கும் அமைப்புகளின் முகத்திரைக் கிழித்தெறியப்பட்டிருக்கிறது.

மத அடிப்படைவாதம் அது எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் அதனை கண்டிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்.

அமைப்புகள் என்பவை மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகள் அல்ல. எப்படி ஒரு ஜாதி சங்கம் ஒட்டு மொத்தமான அந்த ஜாதி மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதோ அது போலத்தான் வேடமிடும் இந்த அமைப்புகளும்.

வேடமிடும் அமைப்புகள் வேறு, மக்கள் வேறு.

எம் தோழன் ஃபாரூக் அப்படி முற்போக்கு வேடமணிந்திருந்த சில அமைப்புகளின் முகத்திரையை கிழித்து அவற்றின் உண்மை முகத்தைக் காட்டி இருக்கிறான் இந்த வாய்ப்பில் அவர்களை நாங்கள் அடையாளம் அறிந்து கொள்கிறோம்.

அமைப்புகளற்ற சில முற்போக்கு முன்னாள் இசுலாமிய சகோதரர்கள் எமக்கு பாடம் சொல்வதை விட்டு விட்டு, அப்படியே திரும்பி மத அடிப்படைவாதிகளுக்கு பாடம் எடுப்பதுதான் அனைவருக்கும் நல்லது.

தலித் – இசுலாமிய – இடதுசாரி – அம்பேத்கரிய – பெரியாரிய கூட்டு என்பது இயல்பானது. இப்போது அதுதான் தேவை என்பதல்ல; எப்போதும் அதுதான் தேவை. பிறப்பின் அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகளைத் தகர்த்து ஒரு சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைக்க நடக்கும் நீண்ட நெடிய வரலாற்றுப் போராட்டத்தில் தலித் – இசுலாமிய – இடதுசாரி – அம்பேத்கரிய – பெரியாரிய கூட்டு தொடர்ந்து களத்தில்
நிற்கும்!
நிற்போம் ! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response