சூழல் போராளிகளைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் – திமுகவின் செயலில் மாற்றம் வருமா?

சுற்றுச்சூழல் உள்ளிட்டு தமிழக வளங்களைக் காக்க தொடர்ந்து போராடிவரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தனர். அதுபற்றிய விவரம்…

தமிழகத்தில் கொண்டுவரப்படும் வாழ்வாதாரங்களை அழிக்கும், சூழலை சீர்கொலைக்கும், திட்டங்களை எதிர்த்து அரசியல் கட்சிகளை சந்தித்து, அந்த மாதிரியான திட்டங்களுக்கு, எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைக்கும் பணியை பூவுலகின் நண்பர்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தி.மு.க.வின் செயல் தலைவரை திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (மார்ச் 17) சந்தித்தோம்.

பல்வேறு திட்டங்களை எப்படி மத்திய அரசு தமிழகத்தின் மீது திணிக்கிறது, குறிப்பாக அணுசக்தி திட்டங்கள் தமிழகத்தை குறிவைத்து அனுப்பப்படுகின்றன என்றும், குஜராத் மாநிலத்தில், மித்திவிர்தியில் அறிவிக்கப்பட்ட அணு உலை திட்டத்தை மக்களின் எதிர்ப்பால், மோடியின் அழுத்தத்தினால் ஆந்திர மாநிலத்திற்கு மாற்றப்பட்ட விசயங்களை வைத்து அரை மணி நேரம் உரையாடினோம். எங்களுடைய முக்கியமான கோரிக்கைகள்:

1. தமிழகத்தில் இனிமேல் புதிய அணு உலைகள் கூடாது என்ற நிலைப்பாட்டை தி.மு.க. எடுக்க வேண்டும், கூடங்குளம் அணு உலையை எதிர்த்த மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க தி.மு,க குரல் கொடுக்க வேண்டும். மக்கள் படும் அவஸ்தைகளை பட்டியலிட்டு நாங்கள் சொன்னோம்.

2. இந்தியாவிலேயே குடிநீரை புட்டியில் விற்கும் ஒரே அரசு தமிழக அரசு தான், அம்மா வாட்டர் (மினரல் வாட்டர்) கொண்டுவருவதற்காக அ.தி.மு.க. அரசு தமிழக நிலத்தடி நீர் சட்டத்தை திரும்பப்பெற்றது, அதன் விளைவாக யார் வேண்டும் என்றாலும் எந்த இடத்திலும் ஆழ்துளை கிணறு (bore well) அமைத்து தண்ணீரை எடுக்கலாம் என்ற நிலை உள்ளது. சென்னையில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் என்ன அந்த சாலையில் மட்டும் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு லாரியில் (டேங்கர்) தண்ணீர் விற்பனை ஆகிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகம் ஒரு பெரிய தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும், விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் என்று எடுத்து வைத்தோம்.

3. ஈஷா யோக மன்றம் எப்படி அரசின் எந்தவித விதிகளையும் மதிக்காமல், அரசின் பல்வேறு நோட்டீசுகளையும் கணக்கில் கொள்ளாமல் 13,00,000 சதுரடி கட்டிடம் கட்டியுள்ளது, அதனை தொடர்ந்து காருண்யாவும் மற்ற கல்விநிலையங்களும் யானைகளின் வலசை பாதையை மறித்து காட்டியுள்ளனர் என்று ஆதாரங்களுடன் விளக்கி சொன்னோம், மேலும் அனுமதி வாங்காமல் நடைபெற்ற ஆதியோகி சிலை திறப்புவிழாவில் பிரதமரும், முதல்வரும் கலந்துகொண்டது தவறு என்றும், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு HACA சட்டத்தை திருத்த முயல்வதாகவும், ஈஷா, காருண்ய போன்ற கட்டிமுடிக்க பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக சட்டத்திலேயே இந்த திருத்தம் கொண்டுவர தமிழக அரசு முயல்வதாக தகவல்கள் வருகின்றன என்றும் அப்படி சட்ட திருத்தம் வரும் பட்சத்தில் தி.மு.க அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்ட திரு.ஸ்டாலின் அவர்கள் உரிய நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவுஎடுப்பதாக சொல்லியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் சூழல் போராட்டத்தில் முதல்முறையாக களத்திற்கு தி.மு.க வந்தது நெடுவாசலுக்கு தான் என்று கூறி நன்றி தெரிவித்தோம், இனி வரும் காலங்களில் சூழல் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டோம்.

தி.மு.க மட்டுமல்ல சூழல் பிரச்சனைகள் குறித்து நாங்கள் தொடர்ந்து அனைத்து கட்சிகளுடன் உரையாடுவோம், தொடர்ச்சியாக நாங்கள் தமிழக முதல்வரையும் சந்திக்க முயற்சி செய்கிறோம். இந்த சந்திப்பில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் பொறியாளர் சுந்தர்ராஜன், வழக்கறிஞர்கள் சுந்தரராஜன், வெற்றிச்செல்வன், ஜியோ டாமின், ஹரிணி, பிரபாகரன் மற்றும் இளைஞர் இயக்கத்தை சேர்ந்த மருத்துவர் எழிலன் ஆகியோர் கலந்துகொண்டோம். இவ்வாறு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சூழல் போராளிகளைச் சந்தித்துப் பேசியிருப்பது நல்ல அறிகுறி. இனிமேலாவது திமுகவின் செயலில் மாற்றம் வந்தால் நல்லது.

Leave a Response