அதிமுக வரலாற்றில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அறிவுரையின் பேரில், கர்நாடகாவைச் சேர்ந்த வா.புகழேந்தி அதிமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுவதாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த புகழேந்தி அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அக் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். புகழேந்தியை கர்நாடக மாநில அதிமுக செயலாளராக ஜெயலலிதா நியமித்தார். புதுவை தேர்தல் பொறுப்பாளராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2014-ல் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த நால்வருக்கும் தேவையான உதவிகளைச் செய்தார். மேலும் அவர்கள் ஜாமீனில் வெளிவருவதற்காக புகழேந்தியும், அவரது குடும்பத்தினரும் உத்தரவாதம் வழங்கினர்.

அதிமுக வரலாற்றில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது.

சசிகலா உள்ளிட்டோர் கர்நாடக சிறையில் இருக்கும் நேரத்தில் இப்பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது.

Leave a Response