கடந்த சில நாள்களாக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளையெல்லாம் தாண்டி, மாணவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வரலாறு காணாத வகையில் தமிழகமெங்கும், அறப்போரை நடத்தி வருகிறார்கள். நமது தமிழர்களின் பண்பாட்டு அடை யாளமாக – இளைஞர்களின் வீரத்தினை ஊக்குவிக்கும் ஜல்லிக்கட்டினை நடத்திடவேண்டும் என்பது உள்பட தமிழரின் உரிமைகள் அனைத்தும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
இந்த உணர்ச்சிக் கொந்தளிப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டுக்காக மட்டும் வெடித்துக் கிளம்பிவிடவில்லை.
இதனுள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கடமை தவறியதோடு, வறட்சி நிவாரணம் உரிய வகையில் அளிக்காததால் நூற்றுக்கணக்கில் விவசாயிகள் மாண்டது,
தமிழ்நாட்டின்மீது சமூகநீதிக்கு எதிராக ஏழை – எளிய கிராமப்புற – முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவம் போன்ற தொழிற்படிப்பைப் படிக்க முடியாது தடுக்கும் ‘‘நீட்’’ (NEET) என்ற நுழைவுத் தேர்வுத் திணிப்பு,
மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கை,
காவிரி நீர் தராத கர்நாடகத்தைக் கண்டுகொள்ளாமல் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் கொடுமை,
சமஸ்கிருதத் திணிப்பு உள்ளிட்ட நமது பண்பாட்டின் வேர்களில் வெந்நீர் ஊற்றி அழிக்க முயலும் பல்வேறு நடவடிக்கைகள் மட்டுமின்றி கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி நாட்டில் செயற்கையாகப் பணப்புழக்கத்தைத் தடுத்து பெருமுதலாளிகள் கோடி கோடியாகச் சம்பாதிக்க வழி செய்த கொடூரம் ஆகியனவற்றால் தமிழக மாணவப் பட்டாளத்தின் மனதுள் கொதித்த எரிமலை வீச்சுதான் இது.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்ற வெகுமக்கள் – மாணவர்கள் போராட்டங்களை வெறும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகளாகப் பார்க்கக் கூடாது; மாறாக, மக்களின் உணர்வுகள் என்பதைப் புரிந்து, பொறியாகக் கிளம்பும்போது அதனை அணைத்துவிடாது – தீர்வு காண மோடி முன்வராவிட்டால் அவர் தமிழகத்துக்குள் நுழைவதே கஷ்டம் என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.