ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே ஆகவேண்டும் என்று தமிழகம் கிளர்ந்தெழுந்திருக்கிறது. இதன்விளைவாக சனவரி 20 அன்று மக்களும் வியாபாரப்பெருமக்களும் தாமாக முன்வந்து கடையடைப்பு நடத்துகிறார்கள். இதற்கு எல்லாத்தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எல்லாக் கடையடைப்புகளின் போதும் மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விநியோகம் தடையின்றி இருக்கும். இம்முறை அதிலும் மாற்றம், பால் முகவர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுப்பது என்பது தமிழர்களின் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை மீட்டெடுப்பது மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய பால் வளத்தை காத்திடும் மிகப்பெரிய முயற்சியாகவும், பன்னாட்டு கைக்கூலிகளை தடை செய்வதின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிரந்தரமாக முடிவு கட்டும் செயலாக அமையும் என்பதாலும் இளைஞர்களின் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பால் முகவர்களும், பால் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் ஆதரவளித்து அவர்கள் நடத்தக்கூடிய மாநிலம் தழுவிய அறப்போராட்டத்தில் மக்களோடு மக்களாக தங்களை இணைத்துக் கொண்டு பங்கேற்று வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், அதற்கு தடையாக இருக்கின்ற பீட்டா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக கிளர்த்தெழுந்து நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர் நல அமைப்புகள், விவசாய சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் விடுத்துள்ள நாளை (20.01.2017) முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முழு ஆதரவை அளிப்பது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1.5லட்சம் பால் முகவர்களும் நாளை காலை 8.00மணி வரையும், அதன் பிறகு மாலை 5.00மணிக்கு பின்னரும் தங்களின் பால் விநியோக மையங்களையும், கடைகளையும் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தங்கு தடையற்ற சேவையினை வழங்குவார்கள். மேலும் காலை 8.00மணி முதல் மாலை 5.00மணி வரை தங்களின் பால் விநியோக மையங்களையும், கடைகளையும் அடைத்து தமிழகம் முழுவதும் நடைபெறும் அறப்போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்தில் லட்சக்கணக்கான சில்லறை வணிக நிறுவனங்கள் காலை 6.00மணி முதல் மாலை 6.00மணி வரை அடைக்கப்பட்டு பங்கேற்க இருப்பதால் சுமார் 50% பாலுக்கான தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பாலினை முன்னதாக வாங்கிக் கொள்ளுமாறும் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.