உங்கள் கனவுகளைக் குழந்தைகள் மேல் திணிக்காதீர்கள் – பெற்றோருக்கு ஈரோடு எஸ்பி சிவக்குமார் வேண்டுகோள்

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று காலை (06.01.17) நடைபெற்றது.. அதில் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசும்போது,

எத்தனையோ விழாக்களில் கலந்துகொண்டாலும் ஒரு கல்வி நிறுவனத்தின் விழாவில் கலந்துகொள்வது மனதுக்கு மிகவும் நெருக்கமான சந்தோச நிகழ்வு, ஏனெனில் எல்லோருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத பருவம் எதுவென்றால் அது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம்தான். அந்தநாட்கள், எவ்விதக் கவலையும் இல்லாமல் எதிர்காலம் பற்றிய பயமில்லாமல் சாதி, மதம் கடந்து எல்லோரும் ஒரு தாய் மக்களாக வாழ்கிற நந்தவன நாட்கள், பாசம் வீசுகிற நாட்கள்.

பள்ளிப் பருவத்தில் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே வாழ்நாள் முழுதும் இருக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை, காலம் செல்லச் செல்ல மதிப்பெண் போட்டியில் ஈடுபட்டு நிறைய சந்தோசங்களை இழக்கும் நிலை இருக்கிறது.

பல ஊர்களில், இந்தப் பள்ளியில் இருப்பது போன்ற கட்டிடங்களோ விளையாட்டு மைதானங்களோ இல்லை. வாடகைக்கு இடம் பிடித்து மாணவர்களை விளையாட வைத்துகொண்டிருக்கிறார்கள்.சில பள்ளிகளில் படிப்பை மட்டுமே படிக்கின்ற எந்திரங்களாக மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்..

அப்படிச் செய்யும்போது பிற்காலத்தில் தன்னந்தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

சில பள்ளிகளில் மாணவர்கள் சொல்லிக்கொடுப்பதை மட்டும் கற்றுக்கொள்கிறார்கள். அறிவுத்தேடல் குறைவாக இருக்கிறது. எனவே ஆசிரியர்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் படிப்போடு தன்னம்பிக்கையையும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்பதுதான்

பல பள்ளிகளில் பாடத்திட்டத்தை எப்படி அமைப்பது எப்படி பயிற்றுவிப்பது என்பதற்காக மிகப்பெரிய ஆராய்ச்சிகளெல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவை தேவையே இல்லை.

இதுபற்றி மகாகவி பாரதியார் மூன்றே முன்று வாக்கியங்களில்,

காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு இதை மனதில் வைத்துக்கொள்ளு பாப்பா என்று சொல்லியிருக்கிறார்.

படிக்கிற வயதில் மாணவர்களுக்கு பாடங்கள் 30 விழுக்காடு, கலை இலக்கியம் ஓவியம் ஆகியன 30 விழுக்காடு தேவைப்படுகிறது விளையாட்டு 40 விழுக்காடு தேவைப்படுகிறது.. இம்மூன்றும் ஒரு சேர இருந்தால்தான் அந்தமாணவன், இந்தச் சமுதாயத்திலே வெற்றிகரமான
மனிதனாக இறுதிவரை மிளிரமுடியும்.

இருபதுவிழுக்காடு மக்கள் .தங்களுடைய பெற்றோருடைய செல்வாக்கில் வாழ்ந்துவிடுவார்கள் மீதியுள்ள எண்பது விழுக்காடு மக்கள் தங்களுடைய கல்வியால் மற்றுமே உயர முடியும். அப்படிப்பட்ட கல்வியை சிறப்பாகக் கற்க வேண்டும்.

அப்துல்கலாம் ராமேஸ்வரத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து வறுமையில் வளர்ந்து தொடக்கக் கல்விக்குப் பிறகு மதுரை வந்து படிக்கிற நேரத்தில், விடுதியில் அசைவம் சாப்பிட 75 ரூபாய், சைவம் சாப்பிட 50 ரூபாய் எனவே நீ சைவமே சாப்பிடு என்று அவருடைய தந்தை சொல்கிறார். அவர், பின்னாட்களில் எவ்வளவு உயரத்துக்குப் போனபோதும் சிறுவய்தில் கிடைக்காத அசைவத்தை எப்போதும் உண்ணுவதில்லை என்று கடைசிவரை வைராக்கியமாகவே இருந்தார்.

அதுபோல பெற்றோருடைய சுமையையும் உணர்ந்து மாணவர்கள் செயல்படவேண்டும். இப்படித்தான் வாழவேண்டும் என்றில்லாமல் குடும்பக்கஷ்டத்தை உணர்ந்து நடந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.மிகப்பெரிய வெற்றி அடையலாம்.

பெற்றோரிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம், டாக்டராக வேண்டும் இஞ்சினியராக வேண்டும் என்கிற நம்முடைய கனவை குழந்தைகள் மீது திணிக்கிறோம். எவ்வளவு பேர் நன்றாகப் படித்தாலும் இவ்வளவு பேர்தான் டாக்டராக வேண்டும் என்று இருக்கிறது. அந்தப்போட்டியில் நம் குழந்தையை எப்படியாவது திணித்துவிட வேண்டும் என்று நினைத்து அவர்களைச் சிரமப்படுத்துகிறோம். அது மிக மிகத் தவறு.

டாக்டர்களும் இஞ்சினியர்களும் மட்டும்தான் சந்தோசமாக இருப்பதாக நினைக்காதீர்கள். அவர்களைவிடப் பலர் அதிக சந்தோசமாக இருக்கிறார்கள். எனவே பெற்றோர் தம்முடைய குழந்தைக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை உணர்ந்து அதில் அவர்களைச் சிறந்தவராக்கப் பாடுபடவேண்டும்.

நான் கூட கால்நடை மருத்துவராகத் தேர்வு எழுதிவிட்டு வேறு துறைக்கு வந்துவிட்டேன்.

அண்மைக்காலமாக குழந்தைகள் மாணவர்கள் ஆகியோர் நிறைய செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதை பெற்றோர் நீங்கள் கண்டிக்கவேண்டும். செல்லில் எவற்றை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவேண்டும். எட்டாவதுக்கு மேல் போய்விட்டால் பையன்களைக் கண்காணிக்கக் கூடாது என்று நாமே நினைத்துக் கொள்கிறோம். எவ்வளவு வயதானாலும் பெற்றோருக்குக் குழந்தைகள்தாம்.

அதேபோல சாலைகளில் வண்டியை ஓட்டும்போது மிகக் கவனக்குறைவாக வண்டி ஓட்டுகிறார்கள். மாணவர்கள் சரியான முறையில் வண்டி ஓட்டிப் பழகி ஓட்டுநர் உரிமம் எடுத்தபிறகு அவர்களை வண்டி ஓட்ட அனுமதிக்க வேண்டும்.

அதேபோல குழந்தைகள் சந்தேகம் கேட்டால் பதில் சொல்லவேண்டும் டிவியைப் பார்த்துத் தெரிந்துகொள் நண்பரிடம் கேட்டுத் தெரிந்துகொள் என்று சொல்லக்கூடாது. பெற்றோரைப் போல அன்போடும் அக்கறையோடும் யாரும் சொல்லித்தரமாட்டார்கள்.

கல்விதான் கடைநிலையில் இருப்பவர்களையும் நல்ல நிலைக்குக் கொண்டுவரக்கூடியது. அதை பயபக்தியோடு கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் காவல்துறையில் பணியாற்றுகிறேன். அங்கு பலபேர் எங்கள் வாகனத்தைக் காணவில்லை பொருட்களைக் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார்கள். ஆனால் என் படிப்பைக் காணவில்லை அறிவைக்காணவில்லை என்று யாரும் புகார் கொடுப்பதில்லை, அப்படி நம்மிடமிருந்து யாருமே பறிக்க முடியாத கல்வியை,அறிவைக் கற்றுக்கொள்ள முக்கியத்துவம் கொடுங்கள் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

.

Leave a Response