
மோடி அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சிறு-குறுந்தொழில், வணிகம் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய மோடி அரசின் தவறான நடவடிக்கைகளைக் கண்டித்து வாலிபர், மாணவர் இயக்கங்கள் சார்பில் டிசம்பர் 31 அன்று சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்ற கண்டன இயக்கத்தின் போது பள்ளிக்கரணை காவல்துறையினர் கண்டன இயக்கத்தில் பங்கெடுத்தவர்கள் மீது தொடுத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். இளம் பெண்கள் மீது பாலியல் ரீதியான சீண்டல்களோடு வன்முறைத் தாக்குதலும் தொடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு காவலில் இருந்தவர்கள் கொடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பொய் வழக்கு புனையப்பட்டு மருத்துவ சிகிச்சையின்றி படுகாயமடைந்த நிலையில் 14 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வைக் கண்டித்தும் இதில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைக் கண்டித்தும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு முகநூல் பதிவிட்டுள்ளார். அதில்,
பள்ளிகரணை பொறுக்கி இன்ஸ்பெக்டர் நடராஜுக்கு எச்சரிக்கை!
மோடி அரசின் செல்லா நோட்டு அறிவிப்பினால் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார அவசர நிலையைக் கண்டித்து நாடு முழுவதும் சனநாயக சக்திகள் போராடி வருகின்றனர். கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மோடி அரசுக்கு எதிராக தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் எழுச்சியோடு ‘அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு’ நடத்தினோம். இடதுசாரி இயக்க தலைவர்களும் அம்மாநாட்டில் கலந்துக் கொண்டு ஒன்றாக களம் அமைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி இந்திய சனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து சென்னை பள்ளிகரணையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புகுந்த பள்ளிகரனை பொறுக்கி இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலிஸ் கும்பல் தோழர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண் தோழர்கள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது போலிஸ் பொறுக்கி கும்பல். தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து நாள் முழுக்க வன்முறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தோழர்களின் அந்தரங்க பகுதிகளில் கும்பலாக சேர்ந்து தாக்கியுள்ளனர். பெண் போலிசாரும் ஆண் போலிசுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல பெண் தோழர்களின் மீது வன்முறை ஏவியுள்ளனர். படுகாயமடைந்த 14 தோழர்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் அளிக்காமல் பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். போலிசின் இந்த அத்துமீறலை கண்டித்தும், மோடிக்கு எதிராகவும் மதுரையில் 3.1.17 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் போலிஸ் வன்முறை கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பிட்ட சில தோழர்களை குறிவைத்து சென்னையிலும், மதுரையிலும் திட்டமிட்டு வன்முறையை அரங்கேற்றியுள்ளது.
சென்னை பள்ளிகரணையில் தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டர் நடராஜ் அவனுடைய பொறுக்கிதனத்துக்கு பெயர் போனவன். காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு யார் சென்றாலும் அவர்களின் முகத்தில் கடுமையாக தாக்கிய பின் தான் விசாரணையையே ஆரம்பிப்பான். இவன் தான் இதற்கு முன்பு பொய்யான பாஸ்போர்ட் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஈழத்தமிழர் தீபனை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்து லாக்கப்பில் கொலை செய்தவன். அப்போதே இவனுக்கு எதிராக எனது தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடத்தினோம். எந்த நடவடிக்கையும் இல்லாமல் பணியில் இருந்த இவன் இப்போது சனநாயக வழியில் போராடிய தோழர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளான். காவல்துறை உயரதிகாரிகளோ அமைதி காக்கின்றனர்.
முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சியும், சசிகலாவுக்கு கீழ் அதிமுகவும் வந்த பிறகு போலிஸ் இன்னும் அதிகமாக வெறியாட்டம் போடத் தொடங்கியுள்ளனர். ஆட்சி நிர்வாகம் முடங்கிப் போயுள்ளது. விவசாயிகள் தினமும் செத்து மடிகின்றனர். சட்டத்தின் ஆட்சிக்கு பதில் போலிஸ் லத்தியின் கட்டுபாட்டில் ஆட்சி நடக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
அப்பட்டமான வன்முறையில் ஈடுபட்டுள்ள இன்ஸ்பெக்டர் நடராஜ், எஸ்.ஐ ரவி உள்ளிட்ட போலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொறுக்கி இன்ஸ்பெக்டர் நடராஜுக்கு எச்சரிக்கை.. எல்லா நேரமும் உன்னைப் போன்ற பொறுக்கியை காக்கிசட்டை பாதுகாத்துவிடுமா?
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


