
நீர் நிலைகள் உள்ளிட்ட பொதுஇடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதை அரசியல்கட்சியினர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
ஈரோடு அருகே இருக்கும் கனிராவுத்தர் குளம் அந்தச் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீர்த் தேவைகளை நிறைவு செய்து வந்தது. இப்போது அந்தக்குளத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள். அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவரே அக்குளத்தை ஆக்கிரமித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை, குளம் மீட்பு இயக்கம் என்று ஒன்று அமைக்கப்பட்டு பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. கனிராவுத்தர்குளத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, குளம் மீட்பு இயக்கத்தினர் பல மாதங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஏற்கெனவே உரிய ஆவணங்களுடன் குளம் மீட்பு இயக்கத்தினர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். மேதாபட்கர் போன்றோரெல்லாம் அங்கு சென்று போராட்டம் நடத்தினர்.
ஆனாலும் குளம் மீட்கப்படவில்லை. இதனால்
`கனி ராவுத்தர் குளம் மீட்பு இயக்கம்’ சார்பாக, கீழ் காணும் கோரிக்கைளை செயல்படுத்தக் கோரி, நிலவன் தலைமையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை டிசம்பர் 25 ஆம் நாள் தொடங்கினர். அது இன்றுவரை (டிசம்பர் 30) தொடர்கின்றது.

போராட்டத்தில் அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள்,
1.`கனிராவுத்தர் குளத்தின் ஆக்ரமிப்புகளையும், பி.கே.டி.நகரில் உள்ள சட்ட விரோத அடுக்குமாடிக் கட்டடங்களையும் உடனே அகற்ற வேண்டும்,
2.தமிழக அரசு நடப்பாண்டிற்கு ஒதுக்கிய 10 கோடி நிதியை பெற்றுக் கனி ராவுத்தர் குளம் புனரமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும்,
3.ஈரோடு மக்களுக்கு நல்ல சுத்தமான குடிநீரை உடனே வழங்கவேண்டும்,
4.காவேரி ஆற்றில், மாநகராட்சி சேகரக் குப்பைகளையும், மருத்துவக் கழிவுகளையும் கொட்டுவதைக் தடுக்க வேண்டும்,
இந்தக்கோரிக்கையை வைத்து ஐந்துநாட்களாகப் போராட்டம் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்தை ஆதரித்து, சனநாயக ஆற்றல்கள், கட்சிகள் , அமைப்புகள், நாம் தமிழர், திராவிடர் கழகம், உழைப்பாளர் மக்கள் கட்சி, த.மு.மு. , ம.நே .ம.கட்சி, மக்கள் மன்றம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆதரவினைத் தெரிவித்தனர்..
5 நாட்களாக உண்ணாவிரதம் நடக்கிறது, அரசாங்கம் அசைந்து கொடுக்கவில்லையே என்கிற கோபம் மக்களிடம் இருக்கிறது.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தைகளில் காலத்தைக் கழிக்காமல் உண்ணாநிலையிருப்பவர்களின் உடல்நலனையும் கனிராவுத்தர் குளத்தின் நலனையும் கருத்தில் கொண்டு அர்சாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


