
பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான ‘சோ’ ராமசாமி (Cho Ramaswamy) டிசம்பர் 7 (புதன்கிழமை) காலமானார். அவருக்கு வயது 82.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோ, சுவாசக் கோளாறு காரணமாக ஒரு சில முறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த வாரம் சுவாசப் பிரச்சினையினாலும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதாலும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.
அவருக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள், நடிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அதே சமயம் தமிழின உணர்வாளர்கள் மாற்றுக் கருத்து கொண்டிருக்கின்றனர்.
சோராமசாமி மரணத்திற்கு தமிழினம் துக்கப்பட வேண்டியதில்லை!
பிராமணீய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு சோராமசாமி மரணம் பெரும் இழப்பாக இருக்கலாம். தமிழினத்திற்கு ஒருபோதும் இழப்பாகாது.
ஏனெனில், தமிழ்மொழி எதிர்ப்பிலும், ஈழ விடுதலை மறுப்பிலும், இராசபக்சே நடத்திய தமிழினப்படுகொலை ஆதரிப்பிலும், தாழ்த்தபட்டோர் சம உரிமை எதிர்ப்பிலும் , இசுலாமிய மக்களை தீவிரவாதிகளாக காட்டும் சித்தரிப்பிலும், தமிழக மக்களின் உரிமைப் போராட்டங்களை கிண்டல் செய்வதிலும், ஆணாதிக்க கருத்துகளை வலியுறுத்திப் பேசுவதிலும், தமிழ்த்தேசியக் கோட்பாட்டை இழித்தும் பழித்தும் கூறுவதிலும், இராசீவ் காந்தி கொலையின் பேரால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிக்கக் கூடாது என்று மனிதாபிமானமின்றி எழுதுவதிலும் தன் வாழ்நாள் முழுவதும் விடாப்பிடியாக இருந்தவன் தான் சோஇராமசாமி.
இவனுக்கு நடுநிலை விமர்சகர் என்று புகழாரம் சூட்டுவதெல்லாம் ஏமாற்று வேலையாகும். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையோ, அவற்றின் பரிணாமமாக வளர்ந்து நிற்கும் பாரதீய சனதா கட்சியையோ ஒருபோதும் கண்டித்தது கிடையாது. மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் நட்புடன் பழகியவர் என்று சிலர் ஒப்பாரி வைக்கிறார்கள். நாளைக்கு இராசபக்சே செத்துப் போனாலும் இதனைச் சொல்லி ஒப்பாரி வைப்பார்கள் போலும்!
ஒரு வீரனின் மரணம் மலையை விடக் கனமானது.
ஒரு எதிரியின் மரணம் பறவையின் இறகைவிட இலேசானது.
இவ்வாறு கருத்துச் சொல்லப்படுகிறது.


