எழுத்தாளர் சுந்தரபுத்தன், சென்னைக்கு மிக அருகில் இருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் போய் வந்து அதுபற்றிய தன்னுடைய அனுபவங்களை தன் முகநூல் பக்கத்தில் எழுதுகிறார். அவருடைய பயணக்குறிப்புகள் படித்துச் சுவைப்பதற்கு மட்டுமின்றி பல அரிய செய்திகளுடன் இருக்கின்றன. அவர் முகநூலில் எழுதிய குறிப்பில்,
தீபாவளிக்கு அடுத்த நாள்.
ரம்மியமான பொழுது என்றால் அந்த நாளைத்தான் சொல்லமுடியும். மழை வரும். ஆனா வராது என்பது மாதிரி வானத்தில் மேகங்கள் கூடியிருந்த அழகான பருவநிலை. காலையில் இருந்தே பனிமூட்டமாக இருந்தது. பக்கத்துல போய்ட்டு வருவோமா என்று கேட்டார் ரெங்கையா முருகன்.
தாம்பரத்தில் இருந்து ஹீரோ ஹோண்டாவில் புறப்படும்போது காலை மணி 10. ஊமை வெயில் எட்டிப்பார்த்தது. நாங்கள் மணிமங்கலம் தர்மேஸ்வரர் கோயிலில் இருந்தோம். எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். போர் வெற்றிக்காக கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. வரலாறு தெளிவாக இல்லை.
கோயில் வளாகத்தில் மிகப்பெரிய ஆலமரம் புல்வெளியில் நிழல் பரப்பி விரிந்திருக்கிறது. புல்வெளியில் அப்படியே உட்கார்ந்துவிட்டோம். பக்கத்திலேயே வீடு பார்த்து தங்கிவிடலாம்போல தோன்றியது.
கோயிலைச் சுற்றி வாழைத் தோப்பு, மகிழமரம், புங்க மரம் செழித்திருக்கிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் கம்பி வேலிகளுக்கு வெளியே வயல்வெளிகள். எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. தூரத்தில் மாநகரத்தின் பெருங்கட்டடங்கள்.
ஒரு தேநீர்.
அடுத்த மணிமங்கலம் ஏரிக்கரையில் வண்டியை விட்டோம். ஒரு சிறு ஆலமரத்தின் அடியில் கன்னியம்மன் கோயில். ஏரியில் குளமாக தெரிந்த நீர்ப்பரப்பில் அல்லிமலர்கள். படித்துறை. ஆடையிலும் கோடையிலும் வற்றாத குளம் என்றார்கள்.
அல்லிக்கொடி இலைகளின் மேல் மடையான்கள். ஏரிக்கரை வழியாக செல்லும்போது கரையெங்கும் இருளர் குடியிருப்புகள். மண் குடிசைகள். நாய்களும் பூனைகளும் அலைந்துகொண்டிருந்தன. கரையின் கடைசியில் சேத்துப்பட்டு கிராமம்.
பிறகு காஞ்சிபுரம் சாலையில் நுழைந்து மலையப்பட்டு போனோம். சாலைகளில் இருமருங்கும் புளியமரங்கள் பந்தலாக நிழல் விரித்திருந்தன. மாந்தோப்புகள், தோட்டங்கள். சீரான வேகத்தில் சூழலை ரசித்துக்கொண்டே செல்வதற்கான அற்புத சாலை.
புகழ்பெற்ற மலையப்பட்டு ஆஞ்சநேயர் கோயில். அங்கே சென்றபோது நண்பகல் நேரம். கோயில் பூட்டிக்கிடந்தது. பூக்கடைகள் வெறிச்சோடியிருந்தன. தெருவோரமாக காலியிடம் ஒன்றில் இரும்புவேலி அமைக்கப்பட்டு தொல்பொருள் ஆய்வுத்துறையின் பலகை.
ஏதாவது இங்கு வரலாற்றுப் புகழ்வாய்ந்த இடம் இருக்கிறதா? என்று ஊர்க்காரர் ஒருவரிடம் விசாரித்தோம். “அதான் போர்டு இருக்குதுல்ல. பார்த்துட்டுப் போ” என்றார் அலட்சியமாக. மிதமான போதையில் இருந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காக போலீஸ் காவல் வேறு ஊரில் பார்க்கமுடிந்தது.
அங்கிருந்து திரும்பி மணிமங்கலம் வழியாக குன்றத்தூர். சில நிமிடங்களில் நீர் ததும்பும் சிறு குளமும் மிகப் பழைமையான இழுப்பை மரங்களும் கொண்ட செல்லியம்மன் கோயில். குளத்தங்கரையில் அமர்ந்தபோது குளிர்ந்த காற்று. திறந்தவெளி. கொஞ்ச நேர இளைப்பாறுதல். அடுத்து பழுதடைந்த தார்ச்சாலையில் பயணம். அண்மையில் விவசாயம் மறந்த வயல்வெளிகள். ஓர் இடத்தில் மட்டும் வெண்டைக்காய் சாகுபடி.
சோமங்கலம். குறுகலான சாலையில் இருபக்கமும் முந்திரிக்காடு. நாவல் மரங்கள். ஜில்லென்றிருந்தது. நந்தம்பாக்கம் வந்தபோது நகரம் வந்திருந்தது. குன்றத்தூரைத் தொட்டுத் திரும்பும்போது நடுவீரப்பட்டு. காட்டில் இருக்கிறது. திசையெங்கும் மரங்கள். வனத்துக்குள் இருக்கும் ஊர் அது. சாலையில் இருந்து எட்டிப்பார்த்தால் புல்வெளிகளில் இரு மயில்கள் மேய்ந்துகொண்டிருந்தன.
நடுவீரப்பட்டு சாலையில் சாய்ராம் பொறியியல் கல்லூரி செல்லும் வழி என்ற அறிவிப்புப் பலகை. காடு மண்டிக்கிடக்கிறது. அப்படியே கடந்து நடுவீரப்பட்டு வந்தோம். பூந்தண்டலம், எருமையூர் என பல சிற்றூர்களைக் கடந்துவந்தது நாளையும் பொழுதையும் அழகாக்கியது. மலையடிவாரத்தில் மழைச் சாரல் கூடிய நாளொன்றில் பயணம் செய்த உணர்வு.
எங்கு வந்தாலும் நடுவீரப்பட்டாக இருந்தது. வழியை மறந்து சுற்றவேண்டியிருந்தது. ஒருவழியாக ஊர் மக்களிடம் வழிகேட்டு, ஏரிக்கரை ஒத்தையடிப் பாதையில் மேடு பள்ளங்களைக் கடந்து சென்றபோது வரதராஜபுரம் வந்திருந்தோம். சில மைல் தூரத்தில் முடிச்சூர் சாலை. நிறையவே மனம் ஆசுவாசம் அடைந்திருந்தது.
வீடு திரும்பும்போது மழை வருவது மாதிரி மேகம் திரண்டிருந்தது.