விஷாலுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் சவால்..!


சிவகார்த்திகேயன் கண்ணீர்விட்டு அழுத்த விவகாரத்தில் விஷாலின் கருத்தை கேட்டபோது, சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என்றும் தானும் அதுபோல சங்கடத்தை சந்தித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.. இந்நிலையில் ரெமோ படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் விஷாலுக்கு சவால் விட்டிருக்கிறார்.

“ரஜினி முருகன் படத்தில் என்ன சிக்கல் இருந்தது என உங்களுக்கு தெரியாது.. அதை எத்தனை பேரிடம் கெஞ்சி சமாதனம் செய்து வெளிக்கொண்டுவந்தோம் என்பதும் உங்களுக்கு தெரியாது.. அப்படி கட்டப்பஞ்சாயத்து பண்ணியிருந்தால், ரெமோ தயாரிப்பாளர் ராஜா எங்களிடம் வந்து சார் நீங்களே ரெமோவை நல்லபடியாக ரிலீஸ் செய்து தாருங்கள் என கேட்டிருப்பாரா என்ன..?

இப்படி சொல்கிறீர்களே விஷால்.. விஜய்சேதுபதி மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் ஹீரோ.. ஆனால் அவரது ‘இடம் பொருள் ஏவல்’ படம் கடந்த ஒன்றரை வருடமாக ரிலீஸாக முடியாமல் கிடக்கிறது.. விஜய்சேதுபதியின் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி சுமாராக ஓடினால் கூட அந்தப்படம் லாபத்தை கொடுக்கும்.. நாங்கள் யாரும் பஞ்சாயத்துக்கு வரவில்லை.. எங்கே நீங்கள் அந்தப்படத்தின் பிரச்சனையில் தலையிட்டு ரிலீஸ் பண்ணுங்களேன் பார்ப்போம்..

அவ்வளவு தூரம் போவானேன்.. உங்களுடைய ‘மதகஜ ராஜா’வையே உங்களால், உங்கள் சங்கத்தினரால் ரிலீஸ் பண்ணமுடியவில்லையே.. ஆனால் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய போராடும், உதவி செய்யும் எங்களை எப்படி கட்டப்பஞ்சாயத்து செய்கிறீர்கள் என உங்களால் கூற முடிகிறது.. முடிந்தால் இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒன்றை ரிலீஸ் செய்துவிட்டு அப்புறம் பேசுங்கள்” என சவால் விடுத்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்..

Leave a Response