நாம் தமிழர் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலிலும் ‘மெழுகுவர்த்திகள்’ சின்னத்தை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 30-09-2016 அன்று ஆணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் பாக்கியராசன்.சே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நடந்து முடிந்த 2016-சட்டமன்றத் தேர்தலைப் போலவே, நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியானது தனித்துப் போட்டியிடுகிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் ‘மெழுகுவர்த்திகள்’ சின்னத்தையே பொதுச்சின்னமாக நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 30-09-2016 அன்று மாலை ஆணை வெளியிட்டுள்ளது.
ஆகையினால் நடைபெறவிருக்கின்ற 2016 தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என கட்சிச் சின்னத்தில் நிற்கக்கூடிய 20,220 பதவிகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் ‘மெழுகுவர்த்திகள்’ சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என பேரறிவிப்பு செய்கிறோம்.
– இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலிலும் மெழுகுவர்த்திகள் சின்னத்தைத் தர தேர்தல் ஆணையம் உடனே சம்மதம் தராமல் இழுத்தடித்திருக்கிறது. என்ன நடந்ததென்று அக்கட்சியினர் சொன்னது,,,
தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்வதற்காக எல்லா கட்சிகளையும் தேர்தல் ஆணையர் நேற்று முன்தினம் சந்தித்தார். மற்ற கட்சிகளில் வந்தவர்கள் எல்லோரும் 50/60 வயதுக்கு மேலானவர்கள். எங்களை அழைத்ததும் உள்ளே சென்று உட்கார்ந்தோம். ஒரு கட்சி சார்பாக இவர்களா என்று ஏற இறங்க பார்த்தார்கள். ராவணன் அண்ணன் எங்களை அடக்கி அவரே பேசத்தொடங்கினார். அதே சின்னம் தான் எங்களுக்கு வேண்டும் என்றார். முதலில் முடியாது என்றார்கள் எல்லாரும் கோரசாக இல்லை அது தான் வேண்டுமென்றோம். அவணங்களை கேட்டார்கள் அனைத்தையும் கொடுத்தோம். சரி உறுதிமொழி கடிதம் கொடுங்கள் என்றார்கள் சரி என்று தலையாட்டினோம். ஒப்புதல் கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.
இரவோடு இரவாக உறுதிமொழிக்கடிதம் தயார் செய்து சமர்பித்தோம். இரண்டு நாட்களாக அதோ இதோ தருகிறோம் என்று இழுத்து நேற்று இரவு 8 மணிக்கு தான் உத்தரவை தந்தனர். மற்ற கட்சியினர் யாரும் வாங்கவரவில்லை. நாம் மட்டுமே அங்கேயே காத்திருந்து பெற்றோம். அவர்களுக்கெல்லாம் கேட்டது வந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்திருக்கலாம். நமக்கு உத்தரவை வாங்கும் வரை உத்தரவாதமில்லை.
வந்த கட்சியினரை விட பாதி வயதில் தான் இருந்தோம். எவ்வித முன் அனுபவம் கிடையாது. ஒவ்வொன்றையும் படித்து கேட்டு தெரிந்து செய்தோம். ஆனால் முதலில் உத்தரவை பெற்றது நாம் தான்.. விளையாட்டு பிள்ளைகள் தான் ஆனால் செய்யும் வேலையின் அதிமுக்கியத்துவம் அறிந்தே செய்து முடிக்கிறோம்.
இவ்வாறு சொல்கிறார்கள்.