ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பிய தமிழச்சி மீது வழக்கு – சந்திக்கத் தயாராக இருப்பதாக சவால்

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை தேறி வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் உடல்நிலை பற்றி கடந்த 3 நாட்களாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் தினமும் மாலையில் தொடங்கி இரவு வரை இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

இந்த தவறான தகவல்களை கேட்டு முதல்-அமைச்சர் உடல்நிலை பற்றி பொதுமக்கள் பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டு வருகிறார்கள்.

செப்டம்பர் 30 அன்று, அ.தி.மு.க. மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்தப் புகார் மனுவில், பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழச்சி என்பவர் தனது முகநூலில் முதல்-அமைச்சர் உடல்நிலை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். தீயநோக்கத்துடன் முதல்- அமைச்சர் உடல்நிலைப் பற்றி அவர் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறையினர் 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். காவல் ஆய்வாளர் கிளாக்சன் தலைமையில் தனிப்படையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கிவிட்டனர்.

தமிழச்சி என்பவர் யார்? அவர் பிரான்ஸ் நாட்டில் எங்கு வசிக்கிறார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழச்சி என்பது உண்மையான பெயராக இருக்காது என்றும், அவரது உண்மையான பெயர் வேறாக இருக்கும் என்றும், தமிழச்சி என்ற புனைபெயரில் இதுபோன்ற தவறான தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார் என்றும் காவல்துறையினர் கருதுகிறார்கள்.

தமிழச்சி தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் தான் ஒரு பெண் என்பதுபோல ஒரு பெண்ணின் புகைப்படத்தோடு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

அவரைப் பற்றிய முழுவிவரம் தெரிந்த பிறகு அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில்,

சென்னை போலிஸ் என் மீது வழக்கு பதிவு. வரவேற்கிறேன். ப்ரெஞ்ச் போலிஸ் விசாரணைக்கு காத்திருப்பேன். உண்மைகள் வெளிவர எனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை கருதுகிறேன்.
#தமிழச்சி
30/09/2016

என்று தமிழச்சியின் முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Leave a Response