சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சென்னை ஏஎம்எம் பள்ளி முன்னெடுத்த நடைபயணம்

சென்னை கோட்டூர்புரத்திலுள்ள ஏஎம் எம் பள்ளியில் உலக முதியோர் தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக நடைபயணம் நடைபெற்றது. அக்டோபர் 1 ஆம் தேதி காலை எட்டு மணியளவில் தொடங்கப்பட்ட இந்நடைபயணத்தில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் கலந்து கொண்டனர். மிகச் சிறப்பாக இருந்த இந்நடைபயணத்தை பிரபல பின்னணிப் பாடகர் சீனிவாஸ் தலைமையேற்று நடத்தினார்.

கார்பன் இல்லா தமிழகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை பாதுகாப்பு, ஆரோக்கிய வாழ்வு, உடல் உறுப்பு தானம் ஆகிய நற்செயல்களை வலியுறுத்தியும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த நடைபயணம் அமைந்திருந்தது, சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் அனைவரும் உற்சாகமாக நடந்துவந்தனர்.


இந்நிகழ்வின்போது, உடல்நலம் பேண மகேந்திரன் அனைவருக்கும் யோகாசனப் பயிற்சி அளித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் உமையாள் செவிலியர் பயிற்சிப் பள்ளி மூலம் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

டிஐஎஸ்டி என்கிற தன்னார்வ தொண்டு அமைப்பு இணைந்து பசுமைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 4000 மரக்கன்றுகளை வளர்க்கும் பணியைத் தொடங்கினர்.

முருகப்பா குழுமம், சென்னை ரோட்டரி சங்கம், அமிர்தாஞ்சன் நிறுவனம், விஸ்வகர்மா பில்டர்ஸ் மற்றும் பெற்றோர்கள் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கரநேத்ராலயாவின் கண்தான விழிப்புணர்வு முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நடைபயணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பள்ளியின் சார்பாக டி சர்ட்டும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

பள்ளி முதல்வர் மகாலட்சுமி ராமலிங்கம் அனைத்து நிகழ்வையும் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்.

மாணவர்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை வளர்க்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனைத்துப் பள்ளிகளும் செய்யலாம்.

– நமது செய்தியாளர்

Leave a Response