தமிழீழ மண்ணில் நிகழும் ஒவ்வொரு சாவிலும் இன அழிப்பின் கூறுகள் இருக்கின்றன – அதிர வைக்கும் பூங்குழலி

ஈழத்தில் போர் முடிந்து ஏழாண்டுகளாகிவிட்டன. ஆனாலும் சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழின அழிப்பு வேலைகள் நடந்துகொண்டேயிருக்கின்றன. இதை வெகுமக்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நோக்குடன் “அறிவாயுதம் – தமிழ்த்தேசிய ஆய்விதழ்” தொடரும் இனப்படுகொலை என்கிற விழிப்பரங்கம் நடத்தியது.

ஆகஸ்ட் 28 அன்று சென்னை உமாபதி அரங்கில் நடந்த அந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். அதில் எழுத்தாளர் மற்றும் களச்செயற்பாட்டாளரான பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்….

2009 மே மாதம் 16-ஆம் தேதியுடன் போர் முடிந்து விட்டது என இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இனி அரசியல் தீர்வு, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேசினால் போதுமானது என்கிறது இலங்கை அரசு.
ஆனால் 2009 மே மாதம் வரை கன ரக ஆயுதங்களைக் கொண்டு வெளிப்படையான இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசு அதன் பிறகு அதி தீவிர இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது.
இன அழித்தொழிப்பு என்பது இனப்படுகொலையை விட பயங்கரமானதாக உள்ளது. தமிழர் என்ற இனம் இலங்கைத் தீவில் வாழ்ந்ததற்கான அடையாளம் ஒரு சிறிதும் இன்றி முற்றிலுமாக துடைத்தழிப்பதில் இலங்கை அரசு முனைப்புடன் உள்ளது. இங்கு இலங்கை அரசு என்பது தனி நபர்களான இராஜபக்சே, இரணில், சிறீசேனா, சந்திரிகா என அனைவரையும் உள்ளடக்கிய சிங்கள பேரினவாதத்தையே குறிக்கிறது.
வரலாற்றுச் சான்றுகளை அழிப்பதன் மூலம் கடந்த காலத்தில் இலங்கைத் தீவில் தமிழர் வாழ்ந்ததற்கான அடையாளங்களை அழிப்பதோடு நிற்கவில்லை அதன் அழித்தொழிப்பு நடவடிக்கை. தமிழர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் முற்றிலுமாக சிதைத்து வருகிறது.
இதன் காரணமாக 2009-க்குப் பின்னான காலத்தில், ஈழத் தமிழ் மக்களின் போரினால் அல்லாத சாவு விகிதாச்சாரம் நம்ப முடியாத அளவு அதிகரிததுள்ளது. அதிலும் குறிப்பாக கொடூரமான நோய்களால் ஏற்படும் சாவுகளும் தற்கொலைச் சாவுகளும் பெரும் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன. இவற்றிற்கு பின்னே மிக நுட்பமான இன அழிப்பு செயற்பாடு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இயற்கை சாவுகளுக்கு எல்லாம் இன அழிப்பு சாயம் பூசுவதா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இயற்கை சாவுகள் என்று விவரிக்கப்படும் இவற்றிற்கு பின் உள்ள கூறுகளை ஆய்ந்து நோக்கினால் இவை எவ்வாறு இன அழிப்பு சாவுகள் என்பது புரியும்.
முக்கியமாக, 2009-மே மாதத்தில் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட போராளிகள் பலர், “புனர்வாழ்வு” என்ற சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே கடுமையாக நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர். இதற்கு சிறையில் அவர்கள் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டது மட்டும் காரணமில்லை. சிறையில் அவர்களுக்கு செயற்கையாக நோய் உண்டாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
சிறையில் இராசாயன ஊசி, இராசாயனம் கலந்த உணவு கொடுக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் மாகாண சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், ஈழத்தைச் சேர்ந்தவரும், தற்போது அய்ரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் சமூகவியல் ஆய்வறிஞராக பணியாற்றி வரும் பரணி கிருஸ்ணரஜனி அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக, சரியாக சொல்ல வேண்டுமானால் 2009-ஆம் ஆண்டு மே மாதத்தில் போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த நாளிலிருந்தே அங்குள்ள சூழலை மிக கவனமாக நோக்கி சமூக ஆய்வுக்கு உட்படுத்தி, தமிழர்கள் மீது தொடர்ந்து வரும் நுட்பமான இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஏறத்தாழ 2010-ஆம் தொடக்கத்திலிருந்தே எழுதி வந்துள்ள செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
கடந்த 6 ஆண்டுகளாகவே, இலங்கை அரசின் நுட்பமான இன அழிப்புக் கூறுகளை வெளிப்படுத்தி வந்த பரணி கிருஷ்ணரஜனி அவர்கள், அண்மையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணி பொறுப்பாளரான தமிழினி அவர்களின் சாவு இயற்கையானது அல்ல என குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இலங்கைச் சிறையிலிருந்து “விடுதலை“யான போராளிகள் அனைவருமே வெளி வந்து குறுகிய காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்ததை குறித்து சந்தேகம் எழுப்பி இருந்தார்.
அன்று தமிழினியின் கணவராக அறியப்படும் ஜெயன் தேவா மற்றும் அந்நூலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் ஆதரவாளர்கள், மற்றும் பிற “அறிவுஜீவிகள்“ அதை அபத்தம் என்று மறுத்தார்கள். இலங்கை அரசை விட அதிகமாக கோபப்பட்டார்கள். பரணியின் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி தமிழினியின் நூல் குறித்து நான் எழுதிய கட்டுரைக்கும் இப்படியான கடுமையான விமர்சனங்களும் எள்ளல்களும் வந்தன. ஆனால் இன்று உண்மை வெளிவந்துள்ளது.
தமிழினி மட்டுமல்ல, சிறையிலிருந்து வெளிவந்த பல போராளிகளும் கடும் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளது உறுதியாகியுள்ளது. பரணி அவர்களின் ஆய்வின் படி புனர்வாழ்விற்கு பிறகு புற்றுநோயால் இறந்த புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் தமிழினி 99-ஆவது நபர் ஆவார். தமிழினி இறந்த மறுநாளே இராணுவ முகாமில் சித்ரவதைக்குள்ளாகி விடுவிக்கப்பட்ட மருத்துவப் போராளி சசிதரன் தாருஜா என்ற சிவகௌரி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடலில் புற்றுநோய்க்கான காரணிகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மருத்துவப் போராளியின் இறப்புக்கு மறுநாள் மதுரையில் அரசு மருத்துவமனையில் இளவேனி என்ற கந்தப்பு கல்பனா என்ற போராளி புற்றுநோயினால் இறந்தார். இவர் அன்பரசி படையணியில் இருந்தவர்.
இவ்வாறு புற்றுநோய் மற்றும் சிறுநீரக செயலிழப்புக் காரணமாக இறந்து போன முன்னாள் போராளிகளின் பெயர்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
வெளிவந்த போராளிகளின் மரணங்கள் நம் கண் முன் நிகழ்ந்து விட்டன. ஆனால் இன்னமும் வெளிவராத போராளிகளின் நிலை என்ன என்றே நமக்குத் தெரியவில்லை. 2009-மே மாதத்தில் 11,000 போராளிகள் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர்களுள் சில நூறு போராளிகள் மட்டுமே வெளிவந்துள்ளனர். ஏனைய போராளிகள் என்னவாயினர் என்ற கேள்விக்கு இலங்கை அரசு எவ்வித பதிலும் சொல்ல மறுக்கிறது. இராஜபக்சே தான் குற்றவாளி. சிறீசேனா உத்தமர் என்றால் போராளிகள் பற்றிய இந்த கேள்விக்கு சிறீசேனா பதில் தரலாமே. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான இளங்குமரன் என்ற பேபி சுப்ரமணியம், யோகி உட்பட பல ஆயிரம் போராளிகளுடன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, ஈராஸ் பாலகுமாரன் உள்ளிட்ட அரசியல் பிரிவினர் பற்றிய விவரங்களையும் 7 ஆண்டுகளாக வெளியிட மறுக்கிறது இலங்கை அரசு.
இது வரை இலங்கை அரசின் பிடியிலிருந்து வெளிவந்த ஒரே முன்னணி பொறுப்பாளர் தமிழினி அவர்கள் மட்டுமே. அவரும் வெளிவந்த சில மாதங்களிலேயே புற்றுநோயால் இறந்து விட்டார்.
அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடுமையாக வேலை வாங்கப்பட்டதாலேயே அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது என்ற அரிய கண்டுபிடிப்பை அவரது கணவர் என்று அறியப்படும் ஜெயன் தேவா உதிர்த்தார். வேறு பல அறிவு ஜீவிகள் அப்படியெல்லாம் புற்று நோயை செயற்கையாக உருவாக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.
பிரிட்டனின் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்துறை விஞ்ஞானியாகப் பணியாற்றிய அருஷ் என்பவர் அதற்கான விளக்கத்தைத் தருகிறார்.
“ஒரு சிறு தூசி அளவு போலோனியம் புற்றுநோயை உருவாக்கப்போதுமானது. ஏன் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புற்றுநோயை ஒருவருக்கு உருவாக்க முடியும் அதற்கு அதிக தொழில்நுட்பம் தேவையில்லை. ஆனால் அதனை நான் இங்கு கூறவிரும்பவில்லை. அது மட்டுமல்லாது ஒருவரை எவ்வளவு காலத்திற்கு பின்னர் அல்லது முன்னர் சாகடிக்க வேண்டும் என்பதையும் பல்வேறு இரசாயனப்பொருட்களை கொண்டு தீர்மானிக்க முடியும்.
நான் பிரித்தானியாவின் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்துறை விஞ்ஞானியாக பணியாற்றிய காலத்தில் மனிதனின் மூளையில் உள்ள பிரச்சனைகளை (புற்றுநோயாக இருந்தாலும்) கண்டறிவதற்குரிய எம்.ஆர்.ஐ ஸ்கானிங் எடுப்பதற்கு முன்னர் மூளைக்குள் செலுத்தும் இரசாயனப்பொருள் (contrast agent)) தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருந்தேன்.
நாங்கள் உருவாக்கும் இரசாயணப் பொருட்களை உயிரியல் பீடத்திற்கு அனுப்புவோம் அவர்கள் அதனை எலி மற்றும் முயல் போன்ற மிருகங்களில் பரிசோதனை செய்வதுண்டு. அவ்வாறு செய்வதற்கு முன்னர் எலிகளுக்கும், முயல்களுக்கும் செயற்கையாகவே புற்றுநோய்களை உருவாக்குவதுண்டு.
இதில் என்ன சிறப்பு என்றால் எந்த பகுதியில் புற்றுநோய்களை உருவாக்க வேண்டும் என தெரிவு செய்து உருவாக்க முடியும்.
எனவே புற்றுநோயினால் மரணமடையும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதை இங்கு மறுக்க முடியாது.” என்று குறிப்பிடுகிறார்.
ஆனால் சிக்கல் போராளிகளுடன் நிற்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை. 2009 மே மாதம் போராளிகள் மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் அனைவருமே இலங்கை அரசின் திறந்த வெளிச் சிறைகளான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் முதல் ஆண்டுகணக்கில் வரையில் அந்த தடுப்பு முகாம்களில் இருந்துள்ளனர்.
முகாம்களில் இருந்த மக்களுக்கு தடுப்பூசி என்ற பெயரில் வலுகட்டாயமாக ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாக வெளிவந்த மக்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு ஊசி செலுத்தப்பட்ட சிலர் சிறிது நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறந்ததும் தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் நோக்கினால், ஒட்டு மொத்த தமிழ் மக்களும் செயற்கையான நோய் பாதிப்புகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
2008 அக்டோபர் தொடங்கி 2009 மே மாதம் வரையில் வன்னி நிலப்பரப்பில் இலங்கை இராணுவத்தின் தீவிரமான தாக்குதல் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமலும், இரசாயன ஆயுதங்களின் பயன்பாட்டாலும் உடல் நலிந்து இருந்தனர். அதிலும் மே மாதத்தில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்கள் ஒரு சிறிய நிலப்பரப்பில் முள்ளிவாய்க்கால் கடற்கரையோரமாக ஒதுங்கியிருந்த நாட்களில் சுகாதார சீர்கேடு உச்சத்தை அடைந்தது. பல நாட்கள் உப்பு நீரையே அருந்தியுள்ளனர். திட உணவு உட்கொள்ள வழியின்றி இருந்துள்ளனர். இதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து போயிருந்தது.
பல வித உடல் உபாதைகளுக்கு ஆளானதோடு ஆழமான உளவியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டனர். இந்த நிலையில் இருந்தவர்கள் உடலில் இரசாயன ஊசி போன்றவை ஏற்றப்பட்ட போது மிக எளிதில் மரண பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்களுக்கு அவர்கள் ஆளாயினர்.
இரசாயன ஆயுதங்களின் பயன்பாட்டால் தமிழ் மக்களின் உடலில் இயற்கையாக காணப்படும் co-enzyme Q -இன் அளவு குறைந்து விட்டது என்றும், இதுவே இனஅழிப்பிற்கான உயிர் வாழும் ஆதாரம் (living genocidal bio makers) என்றும் சொல்கிறார் ஆய்வாளர் பரணி.
“இதன் அளவு உடலில் குறையும் போது படிப்படியாக மிக ஆபத்தான புற்றுநோயிலிருந்து உளவியற் சிக்கல்கள்வரை தோன்றும் வாய்ப்பிருக்கிறது. இதய பலவீனம் மற்றும் கர்ப்பபை சிக்கல்கள் இதன் குறிப்பிடத்தகுந்த பக்க விளைவுகளாகும்.
இவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் அல்ல. அதற்கு தொடர் சிகிச்சை அவசியம். அத்தோடு பெரும் பொருளாதார பலம் வேண்டும். நிலத்தையும் இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து பெரும் பொருண்மிய சிக்கலிற்குள் தவிக்கும் எமது மக்களுக்கு இது சாத்தியமா?
அத்துடன் ஏற்கனவே போரின் வடுக்களினால் உளவியல் சிக்கல்களும், பொருளாதார நெருக்கடிகளும் சூழந்துள்ள வேளையில் சுயபாதுகாப்பு என்பது இயல்பாகவே அவர்களை விட்டு போய்விட்டது. எனவே ஆரம்பத்திலேயே நோய்களை குணப்படுத்த அவர்கள் தயாரில்லை. இறுதியில் நோயும் முற்றி பொருளாதாரமும் நெருக்க தம்மையே அழித்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். அதிகளவிலான தற்கொலைகள் எல்லாம் இந்த பின்னணியிலேயே நடக்கின்றன.“ என்கிறார் அவர்.
கடந்த மாதத்தில் மட்டும் முள்ளிவாய்க்காலில் 2009 மே வரை நின்ற மூன்று பெண்கள் திடீர் மரணத்தை தழுவியுள்ளார்கள். இனம் தெரியாத காய்ச்சல் அல்லது நோய் என்ற பெயரில் அவர்களது சாவுகள் மறைக்கப்பட்டுள்ளன.
மன்னாரைச் சோந்த தமிழரசன் ரோகினி (வயது 40 ), கிளிநொச்சி விநாயகபுரத்தைச்சேர்ந்த ராசா ரமணி வயது 44, ஆகியேரைத் தொடாந்து பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி வரும் தம்பிராஜா சந்திரலதா பலியாகியுள்ளார்.
இலங்கை அரசின் வதைமுகாமில் 2 வருடங்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி சோமசுந்தரம் குணதாசன் பல நூற்றுக்கணக்கான பேராளிகளின் மரணங்களைப்போல் மர்மமான முறையில் உடல் நலிவுற்று மரணமடைந்துள்ளார்.
அவருக்கு பற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்ததாக குடும்ப மட்டத்திலிருந்து தெரியவருகிறது. ஆனால் இன்ன காரணம் என்ற மருத்துவ பரிசீலனை அறிக்கை வெளியிடப்படாமலேயே அவரது மரணம் மூடி மறைக்கப்பட்டுவிட்டது.
இத்தகைய நோய் பாதிப்புகள் எதிர்கால தலைமுறையினரையும் பாதிக்கும் தன்மை வாய்ந்தவை. அணுகுண்டினால் ஏற்பட்ட பாதிப்பு ஜப்பானில் இன்ற வரை பிறக்கும் குழந்தைகளிடம் உள்ளது. போபால் விஷவாயுக் கழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடுத்த தலைமுறையினருக்கும் அதன் பாதிப்பு உள்ளதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இந்நிலையில் இரசாயன குண்டினால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எத்தனை தலைமுறைகளுக்கு தொடருமோ தெரியவில்லை.
அதோடு, ஆய்வாளர் பரணி குறிப்பிட்டுள்ளபடி தமிழ்ப் பெண்களின் மத்தியில் கர்ப்பப்பை சிக்கல்கள் அதிகரித்துள்ளன. இதனாலும் பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் குழந்தை பிறப்பே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் தமிழீழ மண்ணில் தமிழ்க் குழந்தைகளே பிறக்கக் கூடாது. அப்படியே பிறந்தாலும் அவை முழு ஆரோக்கியத்துடன் இருக்கக் கூடாது என்ந தொலை நோக்குத் திட்டத்துடனேயே இலங்கை இன அழிப்பு அரசு செயற்பட்டு வருகிறது.
இது மட்டுமல்ல. கடந்த மே மாதம் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் போது தமிழ் மக்கள் பலர் இறந்துள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் வயிற்றுப் போக்கு, மலேரியா போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் பாம்புக் கடி போன்ற விஷக் கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது இயற்கை அழிவு அல்ல என்கிறார் ஆய்வாளர் பரணி. தமிழ் மக்களுக்கு அடை மழையும் வெள்ளப்பெருக்கும் புதிதல்ல. மலேரியாவும் பாம்புக்கடியும் அவர்கள் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்கள்தாம். ஆனால் முன்பைவிட ஏன் அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது.
சொந்த இடங்களில் குடியேற முடியாமல் காட்டுக்குள் கூடாரம் அமைத்து வாழும் நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து புதிய இடத்தில் ஏதோ ஒரு வகையில் பிழைப்பை நடத்தி வரும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சொந்த இடங்களில் இருந்த காலத்தில் மழைகாலத்திற்கென செய்யும் முன்னேற்பாடுகளை அவர்களால் இந்த தற்காலிக கூடாரங்களில் செய்ய இயலாது. பொருளாதார நெருக்கடிக்குள் நிற்கும் மக்கள் உடனடி சிகிச்சைக்கும் வழியின்றி போகின்றனர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக 2009-க்கு முன், மக்கள் நலனில் ஆழமான அக்கறை கொண்ட விடுதலைப் புலிகளின் அரசு அம்மண்ணில் ஆட்சி புரிந்தது. ஓர் அரசு மேற்கொள்ள வேண்டிய அத்தனை முன்னேற்பாடுகளையும் செவ்வனே அது செய்ததோடு அல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி அவசரகால சிகிச்சைகளுக்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்தி இருந்தது.
இன்று தமிழ் மக்களை அழித்தொழிக்க நினைக்கும் ஓர் அரசின் கீழ், ஓர் அரசு தர வேண்டிய எந்த பாதுகாப்புக்கும் வழியின்றி மக்கள் நிற்கின்றனர். அரசு நிர்வாகத்திடம் கண்டும் காணாத அலட்சியப் போக்கு நிலவுகிறது.
இந்தக் காரணங்களால்தான் 2009-க்குப் பிறகான காலக்கட்டத்தில் மழையினால் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழீழ மண்ணில் நிகழும் ஒவ்வொரு சாவிலும் இன அழிப்பின் கூறுகள் இருக்கின்றன. எதையுமே இயற்கையான மரணம் என்று புறந்தள்ளிவிட முடியாது. ஏன், குடும்பத் தகராறுகளினால் ஏற்படும் சாவுகளும் கூட இன அழிப்பின் கூறுதான் என்கிறார் ஆய்வாளர் பரணி.
தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையான பொருளாதார நெரு்கடி மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தினால் உளவியல் நெருக்கடிக்கும் ஆளாகி நிற்கும் மக்கள் சமூகத்தில் குடும்பத்தில் மட்டும் எவ்வாறு அமைதி நிலவ முடியும்.
இதனால் தமிழ் மக்கள் மற்றும் போராளிகளினது குடும்பங்களில் மன வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாவே உள்ளது.
தொடர்ந்து 7 ஆண்டுகளாக உளவியல் அழுத்தங்களுக்கு ஆளாகி வரும் தமிழ் மக்களுக்கு எவ்வித உளவியல் சிகிச்சையும் இதுவரை தரப்படவில்லை. மாறாக மேலும் மேலும் அழுத்தங்களையே இலங்கை அரசு தந்து வருகிறது. கொதி நிலையில் இருக்கும் அவர்கள் மன நிலையை சமன் படுத்துவதற்கான எவ்வித முயற்சியையும் உலக நிறுவனங்களும் எடுக்கத் தவறி விட்டன. உளவியல் ஊனமுற்றவர்களாகவே தமிழ் மக்களை ஆக்குவதில் இலங்கை அரசு முனைப்புடன் நிற்கிறத. இந்த சிதைக்கப்பட்ட உளவியல் சமூகத்தில் தனது தாக்கத்தை கொடூரமாக காட்டுகிறது. அதன் விளைவாகவே குடும்பத் தகராறுகளும், தனித்து வாழ்தலும், தற்கொலைகளும் அதிகரித்துள்ளன.
2009 மே மாதத்துடன் எதுவும் முடிந்து விடவில்லை. இன்று வரையில் ஈழத்தில் நுட்பமாகத் தொடரும் இன அழிப்பு செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த நாம் உரத்து குரல் கொடுக்க வேண்டும். முதல் கட்டமாக, தமிழீழப் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் முழுமையான உடலியல் மற்றும் உளவியல் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள உலக நாடுகளையும் அய். நா. வையும் நாம் வற்புறுத்த வேண்டும்.
இதுவே இனப்படுகொலையின் ஆதாரங்களை தம் உடல்களில் சுமந்து அவதியுறும் ஈழத் தமிழ் மக்களுக்கு நாம் உடனடியாக செய்ய வேண்டிய கடமையாகும்.
நன்றி தென்செய்தி மாதமிருமுறை இதழ்

1 Comment

Leave a Response