சென்னைக்கு மிக அருகில் வேற்றுலகம் – ஓர் எழுத்தாளரின் பரவசப் பகிர்வு


தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களின் ஒன்றான காஞ்சி மாநகரின் அருகே அமைந்திருக்கும் கிராமம் திருமுக்கூடல். செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் வாலாஜபாதிற்கு சில கிலோமீட்டர்கள் முன் அமைந்துள்ள பழைய சீவரம் அருகே அமைந்துள்ளது இந்த திருமுக்கூடல். திருமுக்கூடல் என்ற பெயரிலேயே நமக்கு விளங்குவது இங்கே மூன்று விஷயங்கள்
கூடுகின்றன என்பது. ஆம் இங்கே கூடுவது ”பாலாறும்” அதன் கிளை நதிகளான ”செய்யாறும்” ”வேகவதியும்”. மூன்று நதிளும் கண்களுக்கு தெரிவது சிறப்பு.


அண்மையில் அங்கு சென்று வந்த, எழுத்தாளர் சுந்தரபுத்தன் தம் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அவருடைய பதிவிலிருந்து….

சென்னைக்கு மிக அருகில்…
வானிலை அறிக்கையில் நான்கு நாட்களுக்கு வெயில் தொடரும் என்று சொல்லியிருந்த சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு கோடம்பாக்கத்தில் இருந்து டூ வீலரில் புறப்பட்டேன். கால் விரல்களில் வெயில் பட்டுத் தெறித்தது.
தாம்பரத்தில் இருந்து பேருந்தில் வாலாஜாபாத் சென்றோம். அங்கிருந்து அரை மணி நேர டவுன் பஸ் பயணத்தில் வருகிறது திருமுக்கூடல். ஒரு கிராமத்து மூதாட்டி, ஒரு ரூபாய் பாக்கி கேட்டு நடத்துனரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். “எத்தனையோ ரூபாயை நான் விட்டுட்டுப் போய்ட்டு இருக்கேன்” என்று தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார் நடத்துனர்.
வேகவதி, பாலாறு, செய்யாறு கலக்கும் இடம். கண்ணுக்குக்கெட்டிய தூரம் வரையில் மணற்காடு. அதன் பின்னணியில் மலைகள் என திருமுக்கூடல் இயற்கையின் தாயகம். ஆற்றில் இறங்கிப் பார்த்தால் அடடா… என்றிருக்கிறது. பார்க்கப் பார்க்க தெவிட்டாத காட்சிகள். பரந்த வானம்… தூரத்தில் தேங்கிக்கிடக்கும் தண்ணீர். இருபுறமும் கரைகளில் கோயில்களும், மரங்களுமாக அழகின் சாட்சிகள்.
தண்ணீர் கரைபுரண்டு ஓடினால் எப்படி இருக்கும்? கற்பனையே மனசை காற்றில் பறக்கவைக்கிறது. சற்று குனிந்து மணலில் பார்த்தால் குவார்ட்டர் பாட்டில்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கின்றன. பூமியின் தொண்டை வரை மணல் தோண்டிய சுவடுகள். மலைகள் மட்டும் இருக்கின்றன.
ஆற்றின் நடுவே நடந்து வந்தால், திருமுக்கூடலின் மறுகரை பழையசீவரம். சிறு மலையின் மேல் லட்சுமிநரசிம்மர் ஆலயம். கால்கள் வலிக்க படிகளில் ஏறிச்சென்றால் காற்று அள்ளுகிறது. அப்போது நண்பர் ரெங்கையா முருகனின் விவரிப்புகள் கூடுதல் அழகு. அதன் வரலாற்றின் பக்கங்களை சொல்லிக்கொண்டே வந்தார்.
வட்டத்துக்குள் சதுரம் படத்தில் இடம்பெற்ற இதோ… இதோ… என் நெஞ்சிலே ஒரே பாடல் காட்சியில் கதாநாயகிகள் அந்தக் கோயிலின் படிகளில்தான் ஆடிப்பாடுவார்கள். அந்தப் பாடலை செல்போனில் ரசித்துக்கொண்டே ஆற்றில் அந்தக் கோயிலை நோக்கி நடந்ததை என்னவென்று சொல்வது.
மலை மேலிருந்து பார்த்தால் சாலைகள்கூட மரங்கள் அடர்ந்த காட்டுப்பாதைகளைப் போலத் தெரிகின்றன. ஆற்று மணல்வெளிக்குப் அப்பால் வீடுகளில் எரியும் மின்விளக்குகள் அழகிய ஓவியங்கள். தூரத்தில் நீளும் ரயில் பாதை.
மாலை மறைந்துகொண்டிருந்தது. அங்கிருந்து வரவே மனமில்லை. ஆட்டோவில் தொற்றிக்கொண்டு வாலாஜாபாத் வந்தபோது இரவு மணி 7.30. மின்சாரம் இல்லாமல் இருண்டிருந்தது நகரம். அடுத்த வண்டியில் தாம்பரத்துக்குப் புறப்பட்டோம். சென்னையைத் தாண்டி சென்னைக்கு மிக அருகில் அரை நாளில் வேற்றுலகம் சென்றுவந்த அனுபவம்.
மனம் லேசாகியிருந்தது.

Leave a Response