இன்று முதல் சென்னைக்குத் தனியாக செங்கல்பட்டுக்குத் தனியாகத் தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக என்று சொல்லி தற்போது ஆறாவது கட்டமாக ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னைக்கு மட்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் தனியாக சில தளர்வுகளும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தனியாக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் சம்பந்தப்பட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய
கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது…..

சென்னையில்….

* ஐ.டி. நிறுவனங்கள் 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 80 நபர்கள்) இயங்கலாம். அவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்களே வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

* மேலும், அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்கலாம்.

* வணிக வளாகங்களைத் தவிர்த்து அனைத்து வகையான ஷோரூம்கள், பெரிய கடைகள்(ஜவுளி மற்றும் நகைக் கடைகள்) 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.

* உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை உணவுகளை பார்சல் வழங்கலாம். போன்கள் மூலம் பெறப்படும் ஆர்டர்களுக்கு வீடுகளுக்குக் கொண்டு கொடுக்கும் சேவையை இரவு 9 மணி வரை மேற்கொள்ளலாம். உணவு கொண்டு வழங்குபவர்கள் தங்கள் நிறுவனத்தின் அடையாள அட்டையைப் பெற்று பணியாற்ற வேண்டும்.

* காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும்.

* டாக்சிகளில் ஓட்டுநர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷாக்களும் அனுமதிக்கப்படுகிறது.

* முடி திருத்தும் நிலையங்கள், ‘ஸ்பா‘ மற்றும் அழகு நிலையங்கள் ஏ.சி. போடாமல் இயங்கலாம். மீன் கடைகள், கோழிக்கறி மற்றும் இறைச்சி கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கலாம்.

* கோவில்கள் அடுத்த உத்தரவு வரும் வரை திறக்கப்படாது. மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தளர்வுகள் விவரம் வருமாறு:-

* கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் திறக்கப்படலாம்.

* அனைத்து வகையான தொழிற்சாலைகளும், ஏற்றுமதி நிறுவனங்களும் 100 விழுக்காடு தொழிலாளர்களுடன் இயங்கலாம்.

* ஐ.டி. நிறுவனங்கள் 100 விழுக்காடு தொழிலாளர்களுடன் இயங்கலாம். அதில், குறைந்தபட்சம் 20 விழுக்காட்டினர் வீடுகளில் இருந்து பணிகளைப் பார்க்கலாம்.

* தனியார் நிறுவனங்கள் 100 விழுக்காடு தொழிலாளர்களுடன் இயங்கலாம்.

* வணிக வளாகங்களைத் தவிர்த்து அனைத்து வகையான ஷோரூம்கள், பெரிய கடைகள் ஏ.சி. இயக்காமல் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கலாம். 5 வாடிக்கையாளரே ஒரு நேரத்தில் கடைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

* தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள் மொத்த இருக்கையில் 50 விழுக்காடு இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் செயல்படலாம்.

* வாடகை கார்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷாக்களும் அனுமதிக்கப்படுகிறது.

* மீன் கடைகள், கோழிக்கறி மற்றும் இறைச்சி கடைகள், முட்டைக் கடைகள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து இயங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Response