சென்னை மாநகராட்சிக்கு ஒரு கொடி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை தாமரல வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய ஆகஸ்ட் 22ம் தேதியை சென்னை தினமாக அறிவித்து, பலரும் கொண்டாடி வருகின்றனர்.

2016 ஆம் ஆண்டு சென்னைநாள் கொண்டாட்டங்களை ஒட்டி தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலர் இளையவேந்தன், மறைக்கப்படும் சென்னையின் அடையாளம் பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,

எவ்வளவு பெரிய சாதனை மறைக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் இலட்சினை சேர சோழ பாண்டியர்களின் சின்னங்கள் ஆகும். இதுவே மாநகராட்சியின் கொடியும் ஆகும்.

சென்னை மாநகராட்சிக்கு ஒரு கொடி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த கொடியில் தமிழ் மூவேந்தர்களின் சின்னங்கள் மீன், புலி, மற்றும் வில் அம்பும் உள்ளது. மேலும் தமிழர்கள் கடல் கடந்து வாணிகம் செய்த கடலோடிகள் என்பதை குறிப்பிட கடலும் கப்பலும் உள்ளது. இந்த இலட்சினையை உருவாக்கியது சென்னையை மீட்ட மா.பொ. சி அவர்கள் தான்.

ஆனால் சென்னை மாகராட்சியின் கொடியை , இலட்சினையை சென்னை நகரில் ரிப்பன் மாளிகை தவிர்த்து வேறு எங்கும் காண முடியாது. சென்னை நகரம் முழுவதும் பறக்க வேண்டிய இக்கொடி மாநகரில் வேறு எங்கும் பறக்கவிடப்படவில்லை. குறைந்த பட்சம் சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களில் இந்த இலட்சினை இடம் பெற்று இருந்தால் கூட அது தமிழரின் பெருமையை உலகிற்கு பறை சாற்றி இருக்கும். இணையத்தில் கூட இந்த கொடி அல்லது இலட்சினை தெளிவான படமாக வெளியிடப்படவில்லை. இது தமிழர்களின் அடையாளங்களை திட்டமிட்டு மறைக்கும் செயலாகும்.

சென்னை நாளை கொண்டாடும் இவ்வேளையில் இனியாவது தமிழர்கள் இந்த மூவேந்தர் இலட்சினையை பரவலாக்கும் வேலையை செய்வோம். சென்னை மாநகர கொடி சென்னையின் மையப்பகுதியில் பறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்போம் . அதுவே சென்னையை மீட்ட மா.பொ. சி ஐயாவிற்கு தமிழர்கள் செய்யும் மரியாதை ஆகும். இணையத்தில் இந்த இலட்சியைனை தெளிவான படமாக வெளியிட தொழில் நுட்ப தமிழர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

என்று சொல்லியிருக்கிறார்.

Leave a Response