இராமதாசும் திருமாவளவனும் பார்த்துப் பாராட்டிய தர்மதுரை

விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தர்மதுரை. இந்த படம் வரும் 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் இப்படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரித்துள்ளார்.

தர்மதுரை படத்தை ஆகஸ்ட் 15 அன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பார்த்தனர்.

இந்தக் காட்சியின் போது தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் , நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் சீனுராமசாமி உடனிருந்தனர்.

படத்தை பார்த்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி. ராமகிருஷ்ணன் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கி.ராமகிருஷ்ணன் தன்னுடைய முகநூலில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்.

பொதுவாக திரைப்படங்களை விரும்பிப் பார்க்காத மருத்துவர் ராமதாஸ் இந்தப் படத்தைப் பார்த்தது எப்படி?

இந்தப் படத்தின் கதை, ஒரு மருத்துவரை மையப்படுத்தியது என்பதால் மருத்துவர் குடும்பமான ராமதாஸ் குடும்பம் படம் பார்க்கவேண்டும் என்று படக்குழுவினர் விரும்பியிருக்கிறார்கள். அதை ராமதாஸ் ஏற்றுக்கொண்டாராம்.

படத்தைப் பார்த்துவிட்டு, “நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தை தர்மதுரை தருகிறது” என்று கூறியுள்ளார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் “ஒரு குடும்பத்தின் உணர்ச்சி மோதல்களை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் சீனு ராமசாமி” என்று தர்மதுரை படத்தை புகழ்ந்தார். தர்மதுரை படத்தில் சமூக நல்லிணக்கம், திருநங்கை மறுவாழ்வு, காதல் ஆகியவற்றை அழகாக சித்தரிக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி என்றார்.

படக்குழுவினரின் விருப்பத்தை  ஏற்றுக்கொண்டு மருத்துவர் ராமதாஸ் தம் குடும்பத்துடன் வந்து படம் பார்த்திருக்கிறார். படம் முடிந்ததும் படத்தில் வருகிற ஒரு காட்சியைக் குறிப்பிட்டு, அந்தக்காட்சியில் கண்கலங்கிவிட்டேன் என்றாராம் ராமதாஸ். அதோடு, “நல்ல கதை, நன்றாக இயக்கியுள்ள படம். தனியார் மற்றும் அரசு கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தர்மதுரை” என்று மருத்துவர் ராமதாஸ் தர்மதுரை படத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அதனால் படக்குழுவினருக்குப் பெருமகிழ்ச்சி. அதோடு ராமதாஸ் குடும்பத்திலுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் படம் பிடித்திருக்கிறதென்பதை அறிந்து மேலும் மகிழ்ச்சியில் இருக்கிறது தர்மதுரை படக்குழு.

 

Leave a Response