பொதுவாக சினிமாவுக்குள் இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் இல்லாமல் ஒரு பொது விஷயத்திற்காக மோதிக்கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதுண்டு.. ஆனால் அதை அப்போதே மறந்துவிட்டு மற்ற விஷயங்களில் நட்புக்கரம் நீட்டும் பக்குவத்தில் இருப்பவர்கள் வெகுசிலரே..
அந்த பட்டியலில் ராதாரவியை தொடர்ந்து ஒய்.ஜி.மகேந்திரன் இடம்பிடித்துள்ளார். என்னதான் நடிகர்சங்க தேர்தலின்போது ராதாரவியும் விஷாலும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும் கூட, பின்னாளில் ‘மருது’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்கள் அல்லவா..?.
சென்னையில் மழைவெள்ள சமயத்தில் ‘பீப்’ பாடல் சர்ச்சையை ஏற்படுத்திய சிம்புவை கண்டித்தவர் தான் ஒய்.ஜி.மகேந்திரன்.
மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே இதுமாதிரி பாடலை உருவாக்கமுடியும். கல்லறைக்குள் இருக்கும் கவிஞர் கண்ணதாசன் இந்த பாடலால் நிச்சயம் நிம்மதி இழந்திருப்பார். யார் மீதும் தவறான பழிகளை இந்த பாடல் உருவாக்கி விடக்கூடாது. எனவே இதற்கு காரணமானவர் யார்? என்பதை கண்டுபிடித்து அவரை தூக்கில் போடவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருந்தார் ஒய்.ஜி.
இப்போது சிம்பு நடித்துவரும் அன்பனவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் ஸ்ரேயாவின் தந்தையாக முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஒய்.ஜி.
அவரை அந்த கேரக்டருக்கு சிபாரிசு செய்ததே சிம்புதானாம். சிம்புவின் இந்தப் பெருந்தன்மை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அதேபோல சிம்பு படத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி என்றும் இந்தப்படத்திலாவது தன்னை காமெடி கேரக்டரில் பயன்படுத்துவார்களா பார்க்கலாம் என்றும் கூறியுள்ளாராம் ஒய்.ஜி.மகேந்திரன்.