சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தலைவர்கள், அவர்களைப் பற்றிப் பாடிய புலவர்கள் ஆகியோரின் காலம் குறித்து ஆய்வுபூர்வமாக எழுதப்பட்ட நூல் பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும். கணியன்பாலன் எழுதியுள்ள இந்நூலில், தமிழ் மொழியின் பழமை, பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை, வணிகம், சங்ககாலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள், தமிழக வரலாற்றுக்கான காலநிர்ணயம், பண்டைய இசைத் தமிழ் இலக்கியம், சங்ககாலக் கடவுள்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
எதிர்வெளியீடு வெளியிட்டுள்ள இந்நூல் அறிமுக விழா, ஈரோட்டில் நடந்தது. விழா குறித்த செய்தி தினமலர் நாளேட்டில் வெளிவந்துள்ளது. விழாவில், தஞ்சை தமிழ்ப் பல்கலை தொல்லியல், கல்வெட்டியல் துறையின் முன்னாள் தலைவர் புலவர் செ. ராசு, கோவை பாரதியார் பல்கலையின் தமிழ்த் துறை முன்னாள் தலைவர்சிற்பி பாலசுப்ரமணியம், தமிழ்நாடு மக்கள் மன்ற செயலர் கண.குறிஞ்சி, கோபி கலைk கல்லுாரி, தமிழ்த் துறை முன்னாள் பேராசிரியர் பழனிச்சாமி, சென்னை பல்கலை தமிழ்த் துறை முன்னாள் தலைவர் வீ. அரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் நூலாசிரியர் கணியன் பாலன் பேசியதாவது, வரலாறு இல்லாத மனிதர்களின் மொழி, இனம் அழிந்து போகும். ஈழத் தமிழர் களுக்கு தங்கள் பண்பாடு, கலாசாரம், தொன்மை தெரியவில்லை. பல நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய, வரலாறு கூட தெரியவில்லை. உலகளாவிய வாசனைப் பொருட்கள் வியாபாரத்தை ஒரு காலத்தில் தமிழர்கள் தான் கட்டுப்படுத்தி வந்தனர்.வ்
வெளிநாடு சென்று சம்பாதிப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால், அங்கு பிச்சை எடுக்கிறோம். இங்கு தொழில் செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும்.
சங்கத் தமிழர்களைப் போல் உலகம் முழுவதும், நாம் வியாபாரம் செய்து பொருளீட்ட வேண்டும். சங்ககாலத் தமிழர்கள் எழுதப் படிக்கத் தெரிந்து இருந்தனர். தலைசிறந்த பண்பை தன்னகத்தே கொண்டிருந்தனர். இவ்வாறு அவர் பேசினார்.