திமுகவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவை அடித்த காரணத்தினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், கட்சி தலைவர் எனது கன்னத்தில் அறைந்தார் என்றும் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர், சசிகலா புஷ்பா கூறினார்.
டில்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை 2 நாட்களுக்கு முன்னர் சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்தார். இந்நிலையில் சசிகலாவை ஜெயலலிதா, நேற்று போயஸ்கார்டனுக்கு அழைத்து விசாரித்துள்ளார். இவரிடம் கட்சி மூத்த நிர்வாகிகள் விசாரித்தததுடன் அவரை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 1 ) காலையில் மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா பேசுகையில் ; நான் திருச்சி சிவாவை கன்னத்தில் உணர்ச்சி வசப்பட்டு அடித்து விட்டேன். இதற்காக நான் சிவாவிடமும், அவரது கட்சித் தலைவரிடமும் நிபந்தனை யற்ற மன்னிப்பு கோருகிறேன். மேலும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நேற்று நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டேன். நான் கட்சித் தலைவரால் விசாரிக்கப்பட்டேன். நானும், எனது கணவர், குழந்தைகளுடன் சென்றேன். எனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற அனுமதி தரவில்லை. மேலும் கட்சித் தலைவர் எனது கன்னத்தில் அறைந்தார். எனது பதவியை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தம் செய்கின்றனர்.
நான் ராஜினாமா செய்ய மாட்டேன், நான் ராஜினாமா செய்ய முடியாது. இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கண்ணீர் விட்டபடி கதறி அழுது கொண்டே பேசினார்.
இந்தப் பேச்சால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு பதில் அளித்த அவைத்தலைவர் தங்கள் பிரச்சனைகளை புகார் மனுவாக தலைவருக்கு கொடுக்குமாறு கேட்டு கொண்டார். இது தொடர்பாக அவை கவனத்தில் கொள்ளும் என்றும் கூறினார்.
இது நடந்த சிறிது நேரத்திலேயே , அதிமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தன்னை ஜெயலலிதா அடித்தார் என்று வெளிப்படையாகப் பேசியதாலேயே அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.