இரண்டு நாட்களுக்கு முன் தி.க போட்ட தீர்மானத்தை உடனே செயல்படுத்திய தமிழக முதல்வர்

சென்னை ஐகோர்ட் பெயரை தமிழ்நாடு ஐகோர்ட் என பெயர் மாற்ற, இன்று  (ஆகஸ்ட் 1)   தமிழக சட்டசபையில் சிறப்புத்  தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழ் வளர்ச்சி குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

தீர்மானம் குறித்துப் பேசிய ஜெயலலிதா, சென்னை ஐகோர்ட் பெயரை தமிழ்நாடு ஐகோர்ட் எனவும், மதுரை ஐகோர்ட் கிளையின் பெயரை தமிழ்நாடு ஐகோர்ட் கிளை எனவும் பெயர் மாற்ற வேண்டும். இது குறித்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தின்  சட்டத் திருத்தத்தில் இந்தப் பெயர் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள ஐகோர்ட் பெயர்களையும் அந்தந்த மாநிலங்களின் பெயர்களிலேயே மாற்ற வேண்டும். இந்தத்  தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இத்தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன.

இதில் குறிப்பிடத்தகுந்த செய்தி என்னவென்றால், இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான், திராவிடர்கழக வழக்குரைஞர் அணிக் கூட்டத்தில் இதே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை-பெரியார் திடலில் 30.7.2016அன்று நடைபெற்றது.  அந்தக்கூட்டத்தில்,

மெட்ராஸ் அய்க்கோர்ட் என்று அழைக்கப்படும் தமிழ் நாட்டின் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான உயர்நீதிமன்றமாகும். ஆங்கிலேயர் காலத்தில் பேரரசரின் ஆணையினால் உருவாக்கப்பட்டதால் இந்நீதிமன்றம் சார்ட்டட் அய்க்கோர்ட் என்ற சிறப்பு சலுகை பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் நீதிமன்றமானதால் அன்றைய தலைநகரமான மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. இந்தியா விடுதலை பெற்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மாநிலத்தின் உயர்நீதிமன்றமும் அம்மாநிலத்தின் பெயருடன் அழைக்கப் படுகிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றமும், அதன் மதுரை கிளையும் இனி தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்றும் தமிழ்நாடு உயர்நீதிமன்ற மதுரை கிளை என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது

என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

கி.வீரமணி தலைமையில் இரண்டு நாட்களுக்கு முன்பு   நிறைவேற்றப்பட்டிருந்த இந்த தீர்மானம் கேட்டுக்கொண்டபடி தமிழக அரசு உடனே செயல்பட்டிருக்கிறது.

 

Leave a Response