ஹரித்துவாரில் வள்ளுவப்பெருந்தகையின் சிலை அவமதிப்பைக் கண்டித்தும், காஷ்மீரில் நடக்கும் மனிதப்பேரவலத்தைக் கண்டித்தும்,
சமூகச்செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும்,
கல்விக்கடனை அடைக்க இயலாதநிலையில், கடனை செலுத்துமாறு கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் லெனினின் மரணத்திற்கு காரணமானவர்களைத் தண்டிக்கக்கோரியும்,பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயர்த்திகட்டும் ஆந்திர அரசின் செயலைக் கண்டித்தும்
நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 24-07-16 காலை 10 மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய சீமான்,
சமூக ஆர்வலர் பியூஸ் மனுசை தாக்கிய சிறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சேலம் மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் அவர் பேசும்போது, திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட செயல் தமிழர்கள் அனைவரையும் அவமதித்ததிற்கு சமம், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுசை கைது செய்ததே மிகப்பெரிய தவறு. அவர் கைது செய்யும் அளவிற்கு குற்றம் ஏதும் செய்யவில்லை, அவரை கைது செய்தது மட்டும் அல்லாமல் சிறைக்கு உள்ளே வைத்து 30 காவலர்கள் தன்னை தாக்கியதாக பியூஷ் மனுஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வேதனையோடு பேசி வடித்த கண்ணீர் ஒவ்வொரு மனிதனுக்கும் பெருத்த அவமானம். சிறை அதிகாரிகள் தன்னைத் தாக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளது தொடர்பாக இந்த தமிழக அரசு என்ன நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. காவலர்கள் ரவுடிகளா, சிறைப்படுத்திய பிறகு அடிப்பதற்கான தேவை என்ன உள்ளது. பியூஷ் மனுஷ் குற்றம்சாட்டிய பிறகு இந்த அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்தியதா? என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
உடனடியாக அந்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும், இல்லை எனில் நாங்கள் சேலம் மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என சீமான் எச்சரித்துள்ளார்.