இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் மகனை கதாநாயகனாக நடிக்கவைப்பது ஏன்?

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓனாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட  வெற்றிப் படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது விஷால் கதாநாயகனாக நடிக்கும் துப்பறிவாளன்  படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து எடுக்கவிருக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பண முதலீடு செய்தவரும் பிரபல தயாரிப்பாளருமான ரகுநந்தன் தயாரிக்கும் புதியபடத்தை மிஷ்கின் இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில்  மைத்திரேயா (Maitreya) என்பவர்  கதாநாயகனாக அறிமுகமாகிறார். மைத்ரேயா லண்டனில் எம்பிஏ  படித்து, மும்பையில் உள்ள நடிப்புக் கல்லூரியில் பயின்று, சினிமாவிற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் கடந்த 2 வருடங்களாக முறையாகக் கற்றுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பிரபல முன்னாள் கதாநாயகனும் குணசித்திர நடிகருமான ரவிசந்திரனின் பேத்தி தானியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கதாநாயகன் மைத்ரேயா தயாரிப்பாளர் ரகுநந்தன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் நடிப்பில் உருவாகிவரும்  துப்பறிவாளன் படம் முடிந்தவுடன் இப்படத்தின் வேலைகள் முழுவீச்சில் துவங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு படம் முடியுமுன்னே அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதும் தயாரிப்பாளர் மகனைக் கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்திருப்பதும் மிஷ்கின் மீது பல விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இதுபற்றி மிஷ்கின் தரப்பில் விசாரித்தால், அவர் பணத்துக்காகவ்வோ அல்லது பணம் கிடைத்தால் போதும் என்பதற்காகவோ தயாரிப்பாளர் மகனை நடிக்கவைக்கவில்லை, அவர் கதைக்குப் பொருத்தமாக இருப்பார் என்பதாலும் மைத்ரேயா அதற்குப் பொருத்தமாகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருப்பதாலுமே தேர்ந்தெடுத்தார் என்கிறார்கள்.

எப்படியோ தமிழ்த்திரையுலகுக்கு இன்னொரு நல்ல கதாநாயகன் கிடைக்கவிருக்கிறார் என்பது நிச்சயம்.

Leave a Response