
தமிழ்நாடு பாஜகவின் சக்திவாய்ந்த பதவிகளில் ஒன்று அமைப்பு பொதுச்செயலாளர் பதவி. அந்தப் பொறுப்பில் கேசவ விநாயகம் இருந்து வந்தார்.2015 ஆம் ஆண்டு முதல் இந்தப் பொறுப்பை அவர் வகித்து வந்தார்.பாஜகவின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும்,கட்சியின் முக்கிய முடிவுகளிலும் இவரது பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
குறிப்பாக,பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய 2 அமைப்புகளுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் மிக முக்கியமான பொறுப்புதான் அமைப்பு பொதுச்செயலாளர் பதவி.
பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தாலும்,நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட அனைத்திற்கும் மாநில அமைப்புச் செயலாளரிடம் ஒப்புதல் வாங்கவேண்டியது கட்டாயமாகும்.அந்தஅளவுக்கு இந்தப்பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அதுவும் பாஜகவில் வெளிப்படையாக கண்ணுக்குத் தெரியாத ஒரு அதிகாரம் மையமாக இந்தப்பதவி இருந்து வருகிறது.இந்தப்பதவியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் மட்டுமே நியமிக்கப்படுவார்.
இந்நிலையில்,சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அந்தக்கூட்டத்தில் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ்,மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன்,அண்ணாமலை, கே.டி.ராகவன்,பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கட்சியில் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒற்றுமையுடன் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அப்போது அண்ணாமலை திடீரென கொந்தளித்தார் என்று சொல்லப்படுகிறது.அவர் அனல் பறக்கப் பேசினாராம். அவர் பேசும்போது,
தேர்தல் பணிகளில் இருந்து என்னை ஒதுக்கியது ஏன்?. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் தேர்தல் வியூகத்தை என்னிடம் கூறுங்கள், நான் கட்சிக்காக உழைக்கிறேன்.திமுகவை வீழ்த்த என்டிஏவின் வியூகம்தான் என்ன?. தேர்தல் வியூகம் குறித்து என்னிடம் இதுவரை மாநிலத் தலைமையோ,தேசியத் தலைமையோ விவாதிக்காதது ஏன்?.பொறுப்பு முக்கியம் இல்லை,வியூகம்தான் முக்கியம்.
சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ வெற்றி பெறுவதற்கான வியூகம் தொடர்பாக என்னுடன் யாரும் இதுவரை விவாதிக்கவில்லை.முதலில் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த என்டிஏவிடம் என்ன வியூகம் உள்ளது? அதைக் கூறுங்கள்.வியூகம் பற்றி விவாதிக்காமல் நான் எப்படி களத்திற்குச் சென்று அரசியல் செய்யமுடியும்?. வியூகம் என்ன என்று கூறாமல் என்னை தேர்தல் பணியாற்றுமாறு கூறினால் எப்படிப் பணியாற்ற முடியும்?
கமலாலயத்தில் உள்ள கம்ப்யூட்டரில் டைப்செய்து பிரின்டரில் பிரிண்ட் எடுத்து தேர்தல்பணியைத் தொடங்குங்கள் என்று வெறும் பேப்பரை கொடுத்தால் மட்டும் போதுமா?.எந்த வியூகத்தின் அடிப்படையில் 6 தொகுதிகளுக்கு என்னைப் பொறுப்பாளர்களாக நியமித்தனர்?. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் மற்றும் மதுரை தெற்கு, சென்னையில் விருகம்பாக்கம் என மாநிலம் முழுவதும் 6 தொகுதிகளுக்கு என்னைப் பொறுப்பாளராக நியமித்ததற்கு என்ன வியூகம் காரணம்?.என்னை வேண்டுமென்றே அலைய விடுவதற்காகவா? பாஜக தேர்தல் வியூகத்தை விளக்கிக் கூறினால் நான் ஒரு தொகுதியில் கூடப் பொறுப்பாளராகப் பணியாற்றத் தயார்.
வியூகத்தைக் கூறாமல் நான் சொல்வதைக் கேட்கவேண்டும் என்கிற தொனியில் என்னை கட்சி அணுகுவது நியாயமா?.இது என்ன பண்ணையார் கட்சியா? என்னை சட்டமன்றத் தேர்தலில் நிற்கவேண்டும் என்கிறீர்கள், தொகுதி பெயரைக் கூறுங்கள், பணியைத் தொடங்குகிறேன்.தொகுதியைக் கூறாமல் வேலை செய்யச் சொன்னால் 234 தொகுதியிலும் போய் நான் வேலை செய்யவேண்டுமா? தேர்தலுக்கு ஒருமாதத்திற்கு முன்பு தொகுதியைக் கூறி என்னை நிற்குமாறு கூறினால் என்னால் எப்படி என்னால் அந்தத் தொகுதியில் வெல்ல முடியும்?.வெற்றிக்கான வியூகத்தை கூறினால் பாஜக மற்றும் என்டிஏ வெற்றிக்காக எந்தப் பணி கொடுத்தாலும் செய்யத் தயார் என்று காரசாரமாக பேசினாராம்.
அதன்பின், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ்,தேர்தல் வியூகத்தை வெளியில் சொல்லமுடியாது. கடந்த மக்களவைத் தேர்தலில் உங்களிடம்தான் பொறுப்பை ஒப்படைத்தோம்.40 தொகுதிகளிலும் தோற்றோம்.தேர்தல் வியூகத்தைச் சொன்னால்,எதிர்க்கட்சிகளுக்கு வியூகம் சென்றுவிடும்.அதனால் அதை வெளியில் சொல்லமுடியாது.தமிழகத்தில் 20,25 தொகுதிகளில் நான் வெற்றி பெற்றிருந்தால்,சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் பின்னால் செல்லவேண்டிய நிலை பாஜகவுக்கும்,மோடிக்கும் ஏற்பட்டிருக்காது.அதற்கு தமிழகத்தில் ஏற்பட்ட தோல்விதான் காரணம்.அதற்காகத்தான் நான் கூட்டணி அமைத்துள்ளோம்.அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்யவேண்டும். மோதல்கள் இருக்கக் கூடாது.
தமிழகத்தில் பாஜகவை வளர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தலைவர்கள் தங்களை வளர்க்கவும், முன்னிலைப்படுத்துவதிலும்தான் தீவிரமாக இருந்து வருகிறார்கள்.கட்சி எப்படிப் போனால் எனக்கு என்ன என்ற பாணியில் இருந்து வருகிறார்.இதனால்,பாஜகவின் செல்வாக்கு என்பது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. கட்சிக்குள் உள்ள தலைவர்களிடத்தில் ஒற்றுமை இல்லை.ஒருவரையொருவர் குறிவைத்துத் தாக்குவதிலும், அவர்களை வெளியேற்றுவதிலும்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள்.அதேபோல அண்ணாமலை போன்றவர்கள் கட்சிக்குள் இருந்து குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல் செயல்பட்டு வருகிறார்கள்.அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அமைப்புச் செயலாளர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு ஆதரவாக இருந்துவருகிறார்.இது எந்தவிதத்தில் நியாயம்.மேலும் கட்சியில் வேண்டியப்பட்டவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இதற்கு கேசவவிநாயகமும் உடந்தையாக இருந்துவருகிறார்.கட்சி ஒருவரை தொகுதிப்பொறுப்பாளராக நியமிக்கிறது.அவ்வாறு நியமிக்கப்பட்ட அண்ணாமலை அப்பதவியில் இருந்து விலகுகிறார்.தேர்தல்பணியை செய்யமாட்டேன் என்று மிரட்டல் விடுக்கிறார்.இந்தஅளவுக்கு மிரட்டலை எல்லாம் எப்படி விட்டுவைத்தீர்கள்? என்று அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினாராம்.
அப்போதுதான் மொத்த நிர்வாகிகளும் அண்ணாமலைக்கு ஆதரவாகச் செயல்படும் கேசவவிநாயகம் குறித்து குற்றச்சாட்டுகளைக் கூற ஆரம்பித்தனர். கூட்டத்தின் முடிவில், கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேசவவிநாயகம் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


