
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவை தொகுதியில், தவெகவில் இணைந்தவர்களை அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது…
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது. அந்தப் படம் வெளியான பின்னர், நிறைய கட்சிகள் முடங்கிப் போகும். அதிமுகவில் 50 ஆண்டுகாலம் உறுப்பினராக இருந்து, கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வந்தேன். என்னை சாதாரணமாக தூக்கி எறிந்து விட்டார்கள். காலம் மாறிக்கொண்டிருக்கிறது.
நம்மை ஏமாற்றுவதற்கு அனைவரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால்,ஏமாறப்போவது ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தான்.எல்லோரும் பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார்கள்.மத்திய அரசும் பயந்து கொண்டுள்ளது. இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய தலைவராக விஜய் உருவெடுப்பார். விஜய் கோட்டையில் அமர்வதைத் தடுக்க முடியாது என்றார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தவெக வெற்றி வாகை சூடும். விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் மலேசியாவில் மாபெரும் கூட்டம் கூடியது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் தவெக தலைவர் விஜய்க்கு பெருமளவில் கூட்டம் கூடுகிறது. பொங்கலுக்குள் அனைத்து நிகழ்வுகளும் நடக்கும். தவெகவில் பலர் இணைய உள்ளனர். தவெக மதம் மொழிகளுக்கு அப்பாற்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தவெக கூட்டணியில் இணைவதை விரைவில் எதிர்பார்க்கலாம். இது பொங்கலுக்கு முன்னரே நடைபெறும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


