
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள பயணியர் மாளிகையில் நேற்று அளித்த பேட்டி….
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. நாங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.2500 வழங்கினோம்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு ரூ.5000 வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய அரசு 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 125 நாளாக உயர்த்தி இருக்கிறது. அந்தத் திட்டத்திற்கு காந்தி பெயரே தொடர வேண்டுமென, நாங்கள் ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
இந்தத் திட்டத்திற்கு 40 சதவீத நிதியை மாநில அரசு வழங்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் பேசி, வாதாட வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப வேண்டும்.
எரிபொருள் விலை உயர்வு, உதவிப் பொருட்கள் விலை உயர்வு, சம்பள உயர்வு இவற்றையெல்லாம் கணக்கிட்டுத் தான், அவ்வப்போது ரயில் கட்டணத்தை உயர்த்துவார்கள். ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா உயர்த்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதை ஒன்றிய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுகவைப் பொறுத்தவரை விரைவில் தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடுவோம். தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டதால், போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையான வாக்காளர்கள் விடுபட்டு இருந்தால், மீண்டும் பெயர் சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்ஐஆர் பணியில் எந்தக் குறைபாடும் இல்லை. இது அனைத்துக் கட்சிக்கும் பொதுவானது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, தவெக விருப்பப்பட்டால் பாஜக கூட்டணியில் வந்து சேர்ந்து கொள்ளலாம் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பாஜகவின் கருத்து. இந்த அரசை அகற்ற, ஒத்த கருத்து உடைய எந்தக் கட்சி வந்தாலும் எங்கள் கூட்டணியில் ஏற்போம் என்றார்.
தவெக தலைவர் விஜய், தூய சக்தி என கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, அவரது கட்சி தீய சக்தியா? தூய்மை சக்தியா? என மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று எங்களது துணைப்பொதுச்செயலாளர் தெளிவாகத் தெரிவித்து இருக்கிறார் என்றார்.


