25 பேருடன் விஜய் கட்சியில் சேருகிறார் கே.ஏ. செங்கோட்டையன்

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அவரது ஆதரவாளர்களுடன் நாளை நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 2 நாட்களாகத் தகவல் பரவியது.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் இருந்து சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்குப் புறப்பட்டார். அப்போது, தவெகவில் இணைகிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டபோது, அதை மறுக்காமல் சிரித்தவாறு சென்றார். உங்கள் மவுனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்ளலாமா.? என்று மீண்டும் கேட்டபோது அப்போதும் பதில் ஏதும் சொல்லவில்லை.

இதைத் தொடர்ந்து கோவை பீளமேடு விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அதிமுக எனும் இயக்கத்திற்காக 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து, உழைத்த எனக்குக் கொடுத்திருக்கக் கூடிய பரிசு, உறுப்பினராக கூட இருக்கக்கூடாது என்று முறையில் நீக்கப்பட்டு இருக்கிறேன். இந்த மன வேதனை என்பது உங்களைப் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதற்கு மேல் எந்தக் கருத்தையும் சொல்லுவதற்கு இல்லை என்றார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டு, த.வெ.க.வில் இணையப் போவதாகக் கூறுகிறார்களே? என்று கேட்டதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் வெறும் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதனால்,அவர் விஜய் கட்சியில் இணையப் போவது உறுதி என்றும் இது எடப்பாடி மற்றும் பாஜகவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என்றும் சொல்லப்பட்டது.

இப்படி இருவேறு கருத்துகள் இருக்கும் நிலையில் விஜய் கட்சியைச் சேர்ந்தவர்கள், கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 25 பேர் நாளை விஜய்யை சந்தித்து எங்கள் கட்சியில் இணையவுள்ளனர் என்று நம்பிக்கையாகச் சொல்கின்றனர்.

கட்சியில் இணைந்தவுடன் அவருக்கு தமிழ்நாடு அளவில் முக்கியப் பொறுப்பு அறிவிக்கப்படவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்பின், அவருடைய மற்ற ஆதரவாளர்கள் அனைவரும் அக்கட்சியில் சேர விழா எடுக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response