அதிமுக ஒருங்கிணைய அதிக வாய்ப்பு – ஓபிஎஸ் தகவல்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை செல்வதற்காக திண்டுக்கல் தொடர்வண்டி நிலையத்திற்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது…

அதிமுக தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கின்ற குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எங்களது கருத்து, தமிழ்நாட்டு மக்களின் கருத்து. அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும்.

எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனை அவர்களே பூர்த்தி செய்து கொடுத்தால் பிரச்னை இல்லை. எஸ்ஐஆர் படிவங்கள் சமர்ப்பிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. மத்திய அரசு கூர்ந்து கவனித்து, பாமர மக்களும் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் படிவங்களை அமைத்திடவேண்டும்.எஸ்ஐஆருக்கு காலக்கெடு நீட்டிக்க வேண்டும். இது மக்களின் கோரிக்கை. கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை. கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

அதன்பின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள்…

காஞ்சிபுரத்தில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் அளித்த வாக்குறுதிகள் குறித்து.?

அவரது கனவு நனவாகட்டும்.

பீகாரில் பாஜக கூட்டணி பெற்ற வெற்றிக்கு எஸ்ஐஆர் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளாரே?

திண்டுக்கல் சீனிவாசன் உண்மையைத் தவிர வேறு ஒன்றும் பேச மாட்டார்.

சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்களை மிரட்டுகிறாரே?

பத்திரிகையாளர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும்.

உங்களுடன் இருந்தவர்கள் விலகுவது உங்களை பலவீனப்படுத்தும் முயற்சியா?

ஒருபோதும் என்னை தனிமைப்படுத்துவது நடக்காது. நாம் பிறக்கும்போது எந்தப் பதவியுடனும் பிறக்கவில்லை இழப்பதற்கு.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?

இணைவதற்கான அடிப்படை பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசியலில் எதுவும் நடக்கலாம். எங்களுக்கும் தனிக் கொள்கை உள்ளது. அந்த கொள்கையின் வடிவில் எங்களுக்கு வாய்ப்பு தந்தால்.
செங்கோட்டையன், தினகரன் உடன் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தினந்தோறும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். தினகரன், அண்ணாமலை சந்திப்பு என்பது நல்ல சந்திப்புதான். அனைவரும் ஒன்றிணைய அதிகமான வாய்ப்புள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response