விஜய்யை கதிகலங்க வைக்கும் உண்மை அறியும் குழு அறிக்கை – விவரம்

செப்டம்பர் 27 ஆம் தேதியன்று நடிகர் விஜய்யின் பரப்புரை காரணமாக 41 உய்ரிகளைப் பலிகொண்ட கரூர் கொடுந்துயரம் நடந்து நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதற்கு விஜய்யின் பொறுப்பற்ற தனம்தான் முழுக்காரணம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றம் சாட்டப்பட்டது.

அதை மெய்ப்பிக்கும் வண்ணம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம் சார்பில் 13 பேர் கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை இருக்கிறது.

அந்த அறிக்கையில்….

தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் பரப்புரையின் ஒரு பகுதியாகக் கரூரில் 27/09/2025 அன்று அதன் கட்சித் தலைவர் விஜய் அவர்கள் மேற்கொண்ட ”மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் (18 பெண்கள் + 10 குழந்தைகள் + 13 ஆண்கள்) உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியது.அதில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள், குழந்தைகள்.அதிலும் கருவுற்ற பெண்களும் கூட இறந்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபோன்ற இறப்பும் பாதிப்புகளும் இனிவரும் காலங்களில் நிகழா வண்ணம் தடுத்து விடும் நோக்குடன், இந்த நிகழ்வின் முழுப் பரிமாணத்தையும் அறிந்து கொள்ள,‌பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம் சார்பில் 13 பேர் கொண்ட உண்மையறியும் குழு 09/10/2025 & 10/10/2025 இரண்டு நாட்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் வழக்கறிஞர்களைச் சந்தித்து உண்மைகளைத் திரட்டி வந்துள்ளோம். அதனை அறிக்கையாக உங்கள் முன் அளிக்கிறோம்.

குழுத் தலைவர்:பேராசிரியர் சரசுவதி
குழு ஒருங்கிணைப்பாளர்: திருமிகு கிறிஸ்டினா சாமி

குழு உறுப்பினர்கள்: திருமிகு ஜாக்லின் 
திருமிகு எஃப்.மேரி லில்லிபாய் 
தோழர் செல்வி
பத்திரிகையாளர் கிருஷ்ணவேணி 
வழக்கறிஞர் சுதா காந்தி
திருமிகு ராதிகா
திருமிகு பாக்கியம்
திருமிகு மஞ்சுளா
திருமிகு ஜானகி 
திருமிகு கலைவாணி
திருமிகு ஹசீன் ஷர்மிளா 

கரூர் கொடுந்துயர் சம்பவத்திற்குக் காரணம் எவருடைய சதியோ, உள்நோக்கமோ இல்லை என்று இந்தக் குழு முழுமையாக நம்புகிறது.  

இந்தத் துயர நிகழ்விற்கு முதன்மைக் காரணம் தவெக தலைவர் விஜய் அவர்கள் மிக காலத் தாமதமாக வந்ததே. காலை 8.45 மணிக்கு நாமக்கலில் பரப்புரைத்தைத் தொடங்க வேண்டிய விஜய் அவர்கள் சென்னையிலிருந்தே 8.45க்குத்தான் கிளம்பியிருக்கிறார். இதுதான் அடுத்தடுத்த தாமதத்திற்குத் தொடக்கமாக இருந்துள்ளது. சென்னையிலேயே இத்தகைய கால தாமதம்த்திற்கான காரணம் என்ன என்பதை இன்று வரை விஜய் அவர்கள் விளக்கவில்லை. அதைத் தொடர்ந்து கரூர் வந்ததும் பெரிய காலத் தாமதத்துடன்தான் எனும் போது, விஜய் அவர்கள் சென்னையிலேயே ஏற்பட்ட தாமதத்திற்கான விளக்கத்தை மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று இந்தக் குழு வலியுறுத்துகிறது. 

விஜய் இரசிகர் கூட்டத்தைப் பெருமளவில் கூட்டி, கூட்டம் காட்டும் எண்ணத்தில், நாமக்கல்லிலிருந்து கரூர் வரும் வழிகளில், வேண்டுமென்றே பல இடங்களில் வண்டியை மெதுவாக இயக்கச் செய்திருப்பதாகத் தெரிகிறது. நாமக்கல்லில் இருந்து கரூர் பைபாஸ் அதிகபட்சம் ¾ மணி நேரத்தில் கடக்கக் கூடிய தொலைவைப் பல மணி நேரம் பயணித்து வந்துள்ளார். இது கரூர் கூட்ட நெரிசலுக்கு ஒரு முக்கியமான காரணம். 

திசம்பர் மாதம் நடக்கவிருந்த தவெக பரப்புரைக் கூட்டமானது, குறைந்த கால அவகாசத்தில் 27/09/2025 அன்றே, திமுகவின் முப்பெரும் விழாவை விட அதிகமான கூட்டம் கூட்டி நடத்தி விட வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டிருப்பதை யாம் உறுதி செய்கிறோம்.  

விஜய் பரப்புரை நிகழ்வு நடத்தத் திட்டமிட்டிருந்த இடத்திற்கு 50 மீட்டருக்கு முன்னரே காவல்துறை வழிகாட்டியபடி வாகனத்தை நிறுத்திப் பேசியிருந்தால் நெரிசல் நெருக்கடி ஏற்படும் வாய்ப்புகளைத் தவிர்த்திருக்க முடியும். 

விஜய்யுடன் இருந்த பாதுகாவலர் ஒருவர் crowd burst என்று எச்சரித்தும் விஜய் அதனை அலட்சியப்படுத்தித் தன் பேச்சை தொடர்ந்தது, மக்கள் நலன் மீது அவருக்கு இருந்த அக்கறையின்மையையும் பொறுப்பின்மையையும் காட்டுகிறது. 

விஜய் கூட்டங்கள் நடக்கும் இடங்களிலும் அவர் ஏர்போர்ட் வந்து போகும் இடங்களிலும் தொடர்ந்து ஏறக்குறைய 2,000 பேர் கொண்ட குழு பின்தொடர்கிறது என்று கவனிக்கப்பட்டுள்ளது. இவர்கள் யார்? இவர்கள் இப்படிப் பின்தொடர தவெக -ஆல் ஏற்பாடு செய்யப்பட்டவர்களா? என விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இக்குழு கேட்டுக்கொள்கிறது. 

விஜய் வண்டி கூட்டத்திற்குள் வந்த பிறகு 20 பேர் கொண்ட ஒரு குழு கூட்டத்தை ஒரு மஞ்சள் வண்ணக் கயிறு கொண்டு உள்நோக்கித் தள்ளியதாகக்  கூறப்படுகிறது. அவர்கள் யார்? என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். 

இரண்டு நாட்களாகவே (25/09/2025 & 26/09/202) சம்பவ இடத்தில் தவெக துண்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.  அதைப் போவதும் வருவதுமாக இரண்டு நாட்களும் மக்கள் பார்த்த வண்ணம் இருந்திருந்திருக்கிறார்கள். அதேபோல் 27/09/2025 அன்றும் காலையிலிருந்தே விஜய் என்னும் நடிகரைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் திருவிழாக் கொண்டாட்டமாக இருந்திருக்கிறார்கள் 

மதிய நேரங்களிலே மேளம், ஆட்டம் பாட்டம் என மக்கள் கூட்டம் இருந்த 27/09/2025 அன்று காலையிலிருந்து மாலை வரை மக்கள் கூடியிருந்திருக்கிறார்கள். தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை வண்டி சம்பவ இடத்திற்கு வரும் போதுதான் காவல்துறையினரும்  வந்துள்ளனர். கரூரில் வாகனம் நிறுத்துவதற்கான வசதியுள்ள இடமாகக் கருதப்பட்ட வேலுசாமிபுரத்தில், ஒவ்வொரு சந்துக்குள்ளும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் காவல்துறை தடுக்கத் தவறிவிட்டது. நெரிபட்டு மூச்சுத் திணறி, தப்பிக்க சந்துக்களுக்குள் நுழைந்த மக்கள் இருசக்கர வாகனங்களால் நிலைதடுமாறி விட்டனர். 

பெண்கள்… குழந்தைகள் பாதுகாப்புக் கருதி, பரப்புரை வண்டி நின்றதற்கு வலதுபுறம் இடம்பிடித்து நின்றிருந்துள்ளார்கள்.  வண்டி நின்ற இடத்திலிருந்த மக்கள், குறிப்பாகப் பெண்கள்… குழந்தைகள் இருந்த இடத்திற்கு நகரவே, அங்கு கட்டுக்கடங்கா நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பகுதி இந்த இடத்தில் நின்றவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். பெண்கள் குழந்தைகள் பெருமளவில் இறந்ததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால், கூட்டம் நசுங்கி நொறுங்கியது என்று சொன்னால் மிகையன்று. அப்படி ஒரு சூழ்நிலையில் இளைஞர்கள் உட்பட கட்டுப்பாட்டை இழந்து, ஆண்களும் பெருமளவில் இறந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. பெண்கள் என்பதால் இறக்கவில்லை, கட்டுப்பாட்டை இழந்த கூட்ட நெரிசல் என்பதால் 41 பேர் இறந்துள்ளார்கள் என்றுதான் சொல்ல முடியும். 

பொதுவாக அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தும் போது ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு பொறுப்பாளர், அவர் அந்தக் குழுவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துக் கொள்வார். அதுவும் கூட அந்தக் குறிப்பிட்ட கட்சியின் குறிப்பிட்ட நிர்வாகம் எத்தனைப் பேர் ஒரு கூட்டத்திற்கு வருவார்கள் என எண்ணிக்கையைக் கணிக்க முடிந்திருக்கிறது.  அது போன்ற எந்த ஏற்பாடும் தவெக சார்பில் இந்த நிகழ்வில் செய்யப்படவில்லை என்பது கூட்ட எண்ணிக்கையைக் கணிக்க முடியாமைக்கான முக்கியமான காரணம். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் அதிகமாகக் கூடியிருக்கிறார்கள்.  

அந்த நாள் சனிக்கிழமை என்பதாலும், வார சம்பளம் வாங்குகின்ற நாளாக இருந்ததாலும், அன்று மாலை 5 மணிக்கு மேல் வேலை முடிகிற நேரம் என்பதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைக் காலம் என்பதாலும், அந்த நேரத்தில் கூட்டம் அதிகரித்து இருக்கிறது. விடுமுறைக் காலம் என்பதால் கூட்டம் பெருமளவில் கூடும் என்பதை உளவுத் துறை கணித்துக் கூறியதா? காவல் துறை அந்தக் கணிப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததா? என்ற கேள்வி எழுகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகக் கால தாமதமாகவே கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதுவே நெரிசலுக்கும் உயிரிழப்புக்கும் காரணமாகும். 

ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் சமூக அக்கறை இல்லாமல் தொடர்ந்து விஜய்யை பிம்பப்படுத்தி பரப்புரை நிகழ்விற்கு வரும்படியான ஆசையைத் தூண்டி, உணர்ச்சியைத் தூணடும் விதமாக, அழைப்பு விடுத்திருக்கிறார்கள். தவெக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் எவ்விதப் பொறுப்புணர்வும், மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாதவர்களாக நடத்தியுள்ளனர். இரசிகர் கூட்டத்தைக் காட்டிக் கட்சி நடத்தி விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். 

வேலுசாமிபுரம், கரூர் இடம் பற்றிய குறிப்பு:

கரூரில் 27/09/2025 அன்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய ‘மக்கள் சந்திப்பு‘ நிகழ்வு நடந்த இடம் வேலுசாமிபுரம். இது பெரும்பாலும் விளிம்புநிலை மக்கள், சாமானிய மக்கள் வாழக் கூடிய இடம். இந்தப் பகுதி இடது வலது பக்கங்களில் நிறையக் கிளைச் சந்துகள் கொண்டது. இது கரூர் ரவுண்டானாவிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் ஈரோடு கரூர் சாலையில் உள்ளது. நிகழ்வு நடந்த இடத்திலிருந்து அருகில் (200 அல்லது 300 மீட்டரில்) ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இடத்திற்கு நேரடியாகக் குழு சென்றது. அங்கு சேதாரம் அடைந்த Asbestos sheet அதே நிலையில் இருந்ததைக் கண்டோம். மேலும் கிளை உடைந்த மரத்தையும், உடைந்த கால்வாய் மூடியையும் கண்டோம்.  கடைகள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் இந்தத் துயர நிகழ்வின் சாயல் அந்த இடத்தை அப்பிக் கொண்டிருந்தது.   

அரசுக்குக் குழுவின் பரிந்துரைகள்: 

1.ஒரு வீட்டில் பல உயிரிழப்புகள், காயமுற்றவர்கள் உள்ள  உணர்ச்சிவயப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்தவர்கள் உயிரிழந்த உறவுகளைச் சந்திக்க, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளனர். மீண்டும் மருத்துவமனை செல்ல முடியாமல் இன்று வரை காயங்களுடன் சரியான மருத்துவ சிகிச்சை இல்லாமல் தவித்து வருகிறார்கள். உடனடியாக அவர்களுக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் அளிக்கப்பட வேண்டும். 

2.பாதிப்புக்குள்ளான குடும்பங்களில் (உயிர் இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள்), ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்கப்பட வேண்டும். 

3.இதுபோன்ற ரோடுஷோ அல்லது பொதுக் கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால் நெறிமுறைகள் என்ற பெயரில் அடிப்படை உரிமைகளான கூட்டம் கூட்டும் உரிமை, பரப்புரை செய்யும் உரிமை, பேச்சுரிமை உள்ளிட்ட கருத்துரிமைகளைக் காவல்துறை வசமோ, நீதித்துறை வசமோ ஒப்படைத்து
விடக்கூடாது. 

4. சார்பற்ற, முறையான, விரைவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். நடந்த கொடுமைகளுக்கான குற்றப்பொறுப்பு தீர்மானிக்கப்பட்டு, காலத் தாழ்வின்றிக் குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

5.இரசிகர் மனப்பான்மை விடுத்து பகுத்தறிவு மனப்பான்மையை ஊக்குவிக்கும் விதத்தில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மாணவர் சங்கத் தேர்தல்கள் தொடக்க பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை அனைத்துக்  கல்விநிலையங்களிலும் உடனடியாக நடத்தப்பட வேண்டும் (இதே பரிந்துரையை  நீதியரசர் சந்துரு தன் one man committee அறிக்கையிலும் வலியுறுத்தி உள்ளார்).

குறிப்பு – இக்குழுவினர் பாதிக்கப்பட்ட மக்கள் பலரிடமும் உரையாடி அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கின்றனர்.

பின்குறிப்பு – இக்குழுவினர் விஜய் எங்கு சென்றாலும் பின் தொடரும் இரண்டாயிரம் பேர் யார்? என்று இதுவரை யாரும் எழுப்பாத கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். அதோடு,விஜய் வருகைக்கு முன் இரண்டுநாட்கள் தவெக துண்டுகள் விற்பனை நடந்திருக்கிறது என்பதும் பதிவாகியிருக்கிறது.இது விஜய் குழுவினரால் திட்டமிடப்பட்ட ஒரு நாடகம்.மக்கள் ஆர்வமாக துண்டுகளை வாங்குகிறார்கள் என்கிற பொய்ச்செய்தியைப் பரப்ப அவர்கள் இதை நடத்துகிறார்கள். அத்துண்டுகள் தாம் விஜய் மீது வீசப்படுகின்றன.அவற்றை வீசுவது விஜய் ஏற்பாடு செய்த ஆட்கள் என்கிற உண்மையை இக்குழு வெளிப்படுத்தியுள்ளது என விசயமறிந்தோர் சொல்லும் தகவல்.

இந்த அதிர்ச்சிகரமான தகவல்களை இக்குழு வெளிப்படுத்திவிட்டதால் இவர்கள் மீது வன்மம் கொண்டு கடும் அநாகரிக விமர்சனங்களை விஜய் குழுவினர் வைத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response