பாஜக கூட்டணியில் இன்னொரு கட்சி போர்க்கொடி – பீகார் பரபரப்பு

243 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான விசயங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இம்முறை களத்தில், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, முன்னாள் முதலமைச்சர் ஜிதம் ராம் மஞ்சியின் எச்ஏஎம், விஎஸ்ஐபி கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசு, சிபிஐ (எம்எல்) (எல்), மார்க்சிஸ்ட், சிபிஐ கட்சிகள் இணைந்த மகாகத்பந்தன் கூட்டணியும் உள்ளன.

இதுதவிர, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனாலும் என்டிஏ, மகாகத்பந்தன் கூட்டணி இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் கடும் குழப்பம் நிலவுகிறது. குறிப்பாக, சிராக் பஸ்வான் தனக்கு 40 முதல் 45 இடங்கள் வரை வேண்டுமென பிடிவாதமாக இருக்கிறார். 2020 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட சிராக் பஸ்வான் கட்சி, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற போதிலும், வாக்குகளை கணிசமாக பிரித்தது. இதனால், ஐக்கிய ஜனதா தளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அக்கட்சி 115 இடங்களில் போட்டியிட்டு 43 இல் மட்டுமே வென்றது. 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் என்டிஏ கூட்டணிக்குத் திரும்பிய சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது.

இதனால் தங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால் 40 இடங்களை கட்டாயம் ஒதுக்க வேண்டுமென சிராக் பஸ்வான் ஒற்றைக் காலில் நிற்கிறார். ஆனால் அவ்வளவு இடங்களைத் தர பாஜகவோ, ஐக்கிய ஜனதா தளமோ விரும்பவில்லை.

இது ஒருபுறமிருக்க இன்னொரு கூட்டணித் தலைவரான, முன்னாள் முதலமைச்சர் மஞ்சி தங்கள் கட்சிக்கு கவுரமான எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்க வேண்டுமென கூறி உள்ளார்.என்டிஏ கூட்டணியில் எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட மாட்டோம். என்றாலும் என்டிஏ கூட்டணியை நாங்கள் ஆதரிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்தமுறை 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக 74 இடங்களைக் கைப்பற்றியது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கடும் சரிவைச் சந்தித்தது. இதனால் இம்முறை ஐக்கிய ஜனதா தளத்தின் வலிமையைக் காட்ட வேண்டுமென்பதில் நிதிஷ் தீவிரமாக உள்ளார். எனவே வழக்கம் போல், பாஜகவுக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் அதிகப்படியான இடங்கள் வேண்டுமென அவர் நினைக்கிறார். ஆனால் கூட்டணிக் கட்சிகள் இம்முறை அதிக இடங்கள் கேட்பதால் பாஜக நிதிஷ்குமார் கூட்டணியில் கடுமையான குழப்பம் நிலவுகிறது.

Leave a Response